அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்(Donald Trump)புளோரிடா மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 53 வயதான மார்கோ ரூபியோவை (Marco Rubio)அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளராக தேர்வு செய்துள்ளார்.
ரூபியோ 2010 முதல் செனட் சபை உறுப்பினராக இருந்து வருகிறார்.
மார்கோ ரூபியோ டிரம்பின் நெருங்கிய நண்பரும் ஆவார்.
2024 ஜனாதிபதி தேர்தலில், துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் போட்டியாளராக ரூபியோவும் இருந்தார். இருப்பினும், துணை ஜனாதிபதியாக ஜே.டி. வேன்ஸ்(J.D. Vance) நியமிக்கப்பட்டார்.
முதல் லத்தீன் வம்சாவளி
மார்கோ ரூபியோ, லத்தீன் வம்சாவளியைச் சேர்ந்தவர், இந்த நியமனத்தின் மூலம் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளராக பதவி வகிக்கும் முதல் லத்தீன் ஆவார்.
ட்ரம்பின் உயர்மட்ட அரசாங்க நியமனங்கள் அனைத்தும் காங்கிரஸால் அங்கீகரிக்கப்பட வேண்டும். டிரம்பின் குடியரசுக் கட்சியினர் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆகியவற்றின் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளனர். எனவே, டிரம்பின் முடிவுகளுக்கு எந்த ஆட்சேபனையும் இருக்காது என தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர்
இதேவேளை,டிரம்ப், தனது நெருங்கிய தோழிகளில் ஒருவரான துளசி கபார்டை அமெரிக்க தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவராக நியமித்துள்ளார்.
டிரம்பின் குடியரசுக் கட்சியில் உறுப்பினராவதற்கு முன்பு, 43 வயதான துளசி கபார்ட், ஜனநாயகக் கட்சியில் உறுப்பினராக இருந்தார். இந்த 2024 ஜனாதிபதி தேர்தலில் அவர் டிரம்புடன் கைகோர்த்தார்.
உக்ரைனில் நடந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்த ஆதரவை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்திய அமெரிக்க காங்கிரஸின் உறுப்பினராக பிரபலமானவர் துளசி. துளசி கபார்ட் அமெரிக்க இராணுவத்தில் மேலதிக பட்டாலியன் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
சட்டமா அதிபர் நியமனம்
இதனிடையே அமெரிக்க சட்டமா அதிபர் பதவிக்கு ட்ரம்ப் தனக்கு நெருக்கமானவரும் குடியரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் காங்கிரஸ் உறுப்பினருமான 42 வயதான மேட் கேட்ஸை தேர்வு செய்துள்ளார். அதன்படி, அமெரிக்க சட்டத்துறையின் தலைவராக மேட் கேட்ஸ் இருப்பார்.