இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள 25% வர்த்தக வரிகளை அடுத்த 24 மணி நேரத்தில் மிக மோசமாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தியா தொடர்ந்து ரஷ்ய எண்ணெய் கொள்முதல் செய்வதும், இந்தியாவின் உயர் வர்த்தக தணிக்கைகளுமே இதற்கு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
போர் இயந்திரம்
“நாங்கள் 25% வர்த்தக வரியில் முடிவுக்கு வந்தோம். ஆனால், அவர்கள் ரஷ்ய எண்ணெய் வாங்குகிறார்கள் என்பதற்காக, அதை அடுத்த 24 மணி நேரத்தில் மிகவும் அதிகமாக உயர்த்தப்போகிறேன்.
அவர்கள் போர் இயந்திரத்தை (war machine) இயங்க வைக்கிறார்கள். அவர்கள் அப்படிச் செய்கிறார்கள் என்றால், அது எனக்கு எப்படியும் ஏற்றுக்கொள்ள முடியாதது,” என ட்ரம்ப் வெளிநாட்டு தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இந்தியாவின் வர்த்தக வரிகள் உலகிலேயே மிகவும் உயர்ந்தவை என்பதால் அவர்களுடன் வர்த்தகம் குறைவாகவே நடப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தியா மீதான வரி
ட்ரம்ப், தனது சமூக ஊடக பக்கத்தில் ஞாயிறன்று வெளியிட்ட பதிவிலும், இந்தியா மிகுந்த அளவில் எண்ணெய் வாங்கி, அதிலிருந்து ரஷ்யாவை பெரும் லாபம் அடைய வைக்கிறது எனவும், உக்ரைனில் எத்தனை பேர் கொல்லப்படுகிறார்கள் என்பது அவர்களுக்கு கவலையில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஏற்கனவே அவர், 2025 ஓகஸ்ட் 1 முதல் இந்தியா மீது 25% வர்த்தக வரிகள் நடைமுறைக்கு வரும் என அறிவித்திருந்தார்.
அதற்குப் பிறகு, உக்ரைனுடன் அமைதி உடன்பாடு எட்டப்படாவிட்டால், ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகள், 100% இரண்டாம் நிலை (secondary) வர்த்தக வரிகளை எதிர்கொள்ளும் என்றும் எச்சரித்திருந்தார்.
ட்ரம்பின் இந்த அறிவிப்புக்கு முன்னதாக இன்று அறிக்கையொன்றை வெளியிட்டிருந்த இந்திய அரசு, இந்தியா மீது மட்டும் குற்றச்சாட்டுகள் வைக்கப்படும் செயல் அநியாயமும், காரணமற்றதுமானதாகும் என குற்றஞ்சாட்டியிருந்தது.
அத்தோடு, இந்தியா, ஒரு முக்கிய பொருளாதாரமாக, தனது தேசிய நலன்கள் மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தயங்காது என்றும் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.