ஈரானிய(iran) உச்ச நீதிமன்றத்திற்குள் இரண்டு மூத்த நீதிபதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று(18) சனிக்கிழமை காலை தலைநகர் தெஹ்ரானில் உள்ள நீதிமன்றத்திற்குள் ஆயுதமேந்திய ஒருவர் நுழைந்து நீதிபதிகள் அலி ரசினி(Ali Razini) மற்றும் முகமது மொகிசே(Mohammad Moghiseh) இருவரையும் சுட்டுக் கொன்றதாக நீதித்துறை செய்தி வலைத்தளமான மிசான் தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடத்தியவர் தப்பிச் செல்லும்போது தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தாக்குதலில் ஒரு மெய்க்காப்பாளரும் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இஸ்லாமிய எதிர்ப்பாளர்களை கொலை செய்த நீதிபதிகள்
தாக்குதலுக்கான நோக்கம் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் 1980கள் மற்றும் 1990கள் முழுவதும் இஸ்லாமிய ஆட்சியின் எதிர்ப்பாளர்களைத் துன்புறுத்தி கொலை செய்வதில் இரு நீதிபதிகளும் பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது.
ஆரம்பக் கண்டுபிடிப்புகளின்படி, தாக்குதல் நடத்தியவர் உச்ச நீதிமன்றத்தால் பரிசீலிக்கப்பட்ட எந்தவொரு வழக்கிலும் ஈடுபடவில்லை. தாக்குதலில் ஈடுபட்டிருக்கக்கூடிய ஏனையோரை அடையாளம் கண்டு கைது செய்ய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதித்துறை செய்தித் தொடர்பாளர் அஸ்கர் ஜஹாங்கிர், ஈரானிய அரசு தொலைக்காட்சியிடம், தாக்குதல் நடத்தியவர் துப்பாக்கியுடன் நீதிமன்றத்திற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறினார்.
அமெரிக்கா,கனடா தடைவிதிப்பு
நீதிபதிகளில் ஒருவரான ரசினி, 1998 இல் நடந்த கொலை முயற்சியில் இருந்து தப்பினார்.
மற்றொரு நீதிபதி மொகிஷே மீது 2019 இல் அமெரிக்கா(us) தடை விதித்தது.
அந்த நேரத்தில், அவர் தெஹ்ரான் புரட்சிகர நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தார். 2020 இல் அவர் உச்ச நீதிமன்றத்தில் பெயரிடப்பட்டதாக கூறப்படுகிறது.
“மொத்தமான மற்றும் முறையான மனித உரிமை மீறல்களில் அவர்களின் பங்கு” என்று தெரிவித்து 2023 இல் கனடாவால்(canada) தடை செய்யப்பட்ட ஏழு ஈரானிய நீதிபதிகளில் மொகிஷேவும் ஒருவர்.