மாகாண சபை தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு எந்த மாகாண சபையிலும் பலத்தை கைப்பற்ற முடியாது போகும் என பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை தொலைக்காட்சி சேவை ஒன்றில் நடைபெற்ற அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர்,
நாட்டில் நடத்திய கணிப்பீடுகளில் இவை தெரியவந்துள்ளது.மாகாண சபை தேர்தலை நடத்துவது அரசின் அபிலாசையல்ல. சர்வதேசத்திற்கு இவர்கள் பயம். ஆனால் இந்தியா சொல்வதை எல்லாம் செய்வதால், அரசின் பலம் குறைவடைவதினை இந்தியா விரும்பாது. ஆகையால் இந்தியாவின் அழுத்தம் இவர்களுக்கு இருக்காது.

ஜெனீவா வாக்குறுதி
ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் மாநாட்டில் மாகாண சபை தேர்தலை நடத்துவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் அடுத்த வருடத்திற்கான மாநாடு மார்ச், செப்டம்பரில் நடைபெறவுள்ளது. ஆகையால் செப்டெம்பருக்குள் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும்.
அரசாங்கம் கட்டாயம் மாகாண சபைத் தேர்தலை நடத்தும்.
நகரசபை நிரந்திர வைப்புகள்
ஏனென்றால் மாநகர சபைகளில் நிரந்தர வைப்புகளில் உள்ள பணங்கள் எடுக்கப்பட்டு அபிவிருத்தி பணிகள் செய்யப்படுகின்றன.
அண்மையில் தெஹிவளை – கல்கிஸ்ஸ மாநகர சபையின் வரவு-செலவுத்திட்டத்தில் நிரந்தர வைப்பிலிருந்து மில்லியன் கணக்கான பணம் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படவுள்ளன.
தேர்தல் ஒன்று அண்மையில் வரும் போதே அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும். இவை அனைத்தும் நடைபெறுவது அடுத்த ஆண்டு தேர்தலுக்காகும்.

தொகுதிவாரி வேட்பு மனுக்கள்
தேர்தல் சட்டத்திட்டங்களில் குறிப்பிட்டபடி மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தொகுதிவாரியாக வேட்பு மனுக்கள் கோர வேண்டும்.
ஆனால் பிரச்சினை இருப்பதால், தொகுதி முறைமையை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளில் இல்லாதொழித்து பழைய முறையில் தேர்தலை நடத்தலாம் என்றார்.

