இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறலை நிவர்த்தி செய்வதற்கு உள்நாட்டுப்
பொறிமுறையை நிறுவ வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்,
இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.
அந்த உள்நாட்டுப் பொறிமுறையானது சர்வதேச விதிமுறைகளுடன் ஒத்துப்போக வேண்டும்
என்றும், அத்தகைய பொறிமுறையை நிறுவுவதில் இலங்கை சர்வதேச ஆதரவைப் பெற வேண்டும்
என்றும் வோல்கர் டர்க் இடித்துரைத்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம்
இலங்கைக்கான தனது பயணத்தை நிறைவு செய்த ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர்
கொழும்பில் நேற்று செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பில் அவர்,
“உள்நாட்டுப் பொறிமுறை தொடர்பில் அரச தரப்பினருடன் விவாதித்தேன். பயங்கரவாதத்
தடைச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை
உடனடியாக விடுதலை செய்யவும் வலியுறுத்தினேன்.
அத்துடன், பயங்கரவாதத் தடைச்
சட்டம், ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம் என்பவற்றை இரத்துச் செய்ய வேண்டும்
என்றும் வலியுறுத்தினேன்.
மேலும், பாதுகாப்பு, பொலிஸ் துறைகளில் சீர்திருத்தங்களின் அவசியத்தையும்
குறிப்பிட்டேன்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை மீண்டும் தொடங்குவது
ஒரு நேர்மறையான நடவடிக்கையாக அமையும் அரச தரப்பினரிடம் சுட்டிக்காட்டினேன்” என குறிப்பிட்டுள்ளார்.

