காசாவில் (Gaza) உணவு விநியோகம் சிக்கலில் இருப்பதால் அங்கு பட்டினி காரணமாக ஏராளமான காசா மக்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பலஸ்தீனத்தை (Palestine) இஸ்ரேலின் (Israel) ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க பல்வேறு ஆயுதம் ஏந்திய குழுக்கள் செயல்பட்டு வரும் நிலையில் ஹமாஸ் (Hamas) அமைப்பு கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
இதனால், இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது வரை போர் நீடித்து வருவதால் காசாவுக்குள் நிவாரண பொருட்கள் எதுவும் கொண்டுச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை
இதனையடுத்து, உணவுக்கும் குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் உணவு கிடைக்காமல் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளதுடன் தொற்று நோய் பாதிப்புகளும் தீவிரமடைந்துள்ளன.
இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
இருப்பினும், இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு தயராக இல்லை என்பதால் தெற்கு காசா பகுதியில் உணவை விநியோகிக்க வாய்ப்பு இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.