பிரித்தானியாவில் இன்று வெளியாகிய க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளில் ஈழத் தமிழ் பூர்வீக மாணவர்கள் நல்ல பெறுபேறுகளை பெற்றிருப்பதை ஆரம்ப கட்டத் தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன.
காலை முதல் லட்சக்கணக்கான மாணவர்கள் தமக்குரிய க.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் பிரெக் உட்பட்ட உயர்தர
தேர்வு முடிவுகளைப் பெற்றுவரும் நிலையில் ஈழத்தமிழ் பூர்வீக மாணவர்களுக்கும் நல்ல பெறுபேறுகள் கிட்டியிருப்பதை குறித்த மாணவர்களின் குடும்ப உறுப்பினர்களின் சமுக வலைதளப்பதிவுகள் மற்றும் தமிழர்களின் கல்விச்சேவை வட்டாரங்கள் ஊடாக அறிய முடிந்துள்ளது.
இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகிய பிராந்தியங்களில் வெளியான இந்த முடிவுகளில் கடந்த வருடத்தை விட இந்த முறை உயர் பெறுபேறுகளை பெற்றவர்களின் வீதம் உயர்ந்துள்ளது.
சிறப்பான பெறுபேறு
அனைத்து தரங்களிலும் 28.3 வீதமானோர் ஏ பிளஸ் அல்லது ஏ தர உயர் சித்திக்குரிய மதிப்பெண்களைப்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இவ்வாறன நல்ல பெறுபேறுகளை பெற்றவர்களின் வீதம் 27.8 ஆக இருந்த நிலையில் இந்த வருடம் அது 28.3 சத வீதமாக உயர்ந்துள்ளது.
இந்த முடிவுகளின் படி அதிகளவு மாணவர்களுக்கு சாதனை அளவாக தாம் முதற்தெரிவாக குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கான இடங்கள் கிட்டியுள்ளன.
இன்றைய முடிவுகளில் இன்னொரு பதிவாக 2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக மாணவர்கள் சிறப்பான பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.
கணிதபாடத்தில் ஆண் மாணவர்கள் மாணவிகளை விட சிறப்பான பெறுபேறுகளை பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.