Courtesy: uky(ஊகி)
முல்லைத்தீவில் உள்ள தேக்கமரக் காடுகளை உரிய முறையில் பராமரிப்பதில்லை என ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தேக்கமரக் கன்றுகளை உரிய முறையில் கிளைகளை வெட்டி நேரிய மரத்தண்டுகளாக அவை வளர்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என அவர்கள் குறிப்பிட்டனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முயற்சியினால் வீதியோர தேக்கம் காடுகள் உருவாக்கப்பட்டும் பராமரிக்கப்பட்டும் வந்திருந்தன.
அவர்களைப் போல் இப்போதெல்லாம் தேக்கம் காடுகளை பராமரிப்பதில் கூடியளவு அக்கறை காட்டுவதில்லை என அனுபவத்தால் உணரும் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வர்த்தக பயிராக கருதப்படும் தேக்கமரங்கள் வளர்க்கப்படும் முறையிலேயே அதிக பயனுடையதாகி கிடைக்கும் இலாபத்தினை அவை அதிகரிப்பதற்கு உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
கிளை வெட்டும் காலம்
தேக்கு மரக்கன்றுகளை நாட்டி பராமரித்து வருதல் இப்போது இலங்கை வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படுகின்றன.
இது மீள்வனமாக்கல் திட்டமாகவும் இலாபம் தரும் பயிர்ச்செய்கையாகவும் அமைதல் வேண்டும்.எனினும் தேக்குமர துண்டங்களை சந்தைப்படுத்தி அதிக இலாபம் ஈட்டும் ஒரு வர்த்தக நோக்கிலான முயற்சிகளாக முன்னெடுக்கப்படுவதில் கூடியளவு அக்கறை காட்டப்படவில்லை என முள்ளியவளை பகுதியில் உள்ள தேக்கம் கன்றுகள் பற்றி குறிப்பிடும் போது அப்பகுதி வயோதிபர்கள் சிலர் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
முல்லைத்தீவில் உள்ள தேக்கம் காடுகளினுள் உள்ள தேக்கம் கன்றுகள் கிளை வெட்டி சீர் செய்ய வேண்டிய சூழல் உள்ள போதும் அவை மேற்கொள்ளப்படாது இருக்கின்றதனையும் அவதானிக்கலாம்.
கிளைகளை உரிய காலத்தில் வெட்டாது விடும் போது பிரதான தண்டுடன் அவை கிளை கொள்ளலை ஆக்கும் போது நீளமான நேரிய தண்டுகளை பெற முடியாத சூழல் தோன்றும்.
தேக்கம் கன்றுகள் நெருக்கமாக நடுப்படுவதன் மூலம் கிளை கொள்ளலை தவிர்த்து பிரதான தண்டு நீண்டு வளர்வதனை ஊக்குவிக்க எத்தனிக்கப்படும்.இதனால் ஆரம்பத்தில் தோன்றும் சிறு கிளைகள் நாளடைவில் இறந்து விடும் என தேக்கம் காடுகள் பற்றிய தன் அனுபவத்தினை 2009 க்கு முன்னர் உருவாக்கப்பட்ட தேக்கம் காடுகளினுள் பணியாற்றியவர் குறிப்பிடுகின்றார்.
ஆயினும் தேக்கம் கன்றுகளில் தோன்றும் கிளைகளை குறிப்பிடத்தக்க உயரத்திற்கு வளரும் வரை வெட்டி அகற்றி பராமரித்தல் அவசியம் என அவர் குறிப்பிட்டார்.
முள்ளியவளையில் உள்ள தேக்கம் காடொன்றில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கவனம் தேவை
தேக்கு மரங்களை வெட்டு மரங்களாக பயன்படுத்துதல் என்பது, காட்டு மரங்களை வெட்டு மரத் தேவைக்காக வெட்டி அகற்றுவதால் காடழியும் சந்தர்ப்பங்கள் குறைக்கப்படும்.
உள்நாட்டுத் தேவைக்கு மட்டுமன்றி வெளிநாட்டு தேவைகளுக்காகவும் தேக்கு மரங்களை ஏற்றுமதி செய்து கொள்ளலாம்.
தேக்கம் துண்டங்களை வெளிநாட்டுத் தேவைக்கு ஏற்றதாக பயிரிட்டு சந்தைப்படுத்தும் போது அதிகளவு வெளிநாட்டு நாணயங்களை இலங்கை பெற்றுக்கொள்ள வாய்ப்பாகும்.
தேக்கு நன்றாக வளரக்கூடிய மண்வளம் இருப்பதால், தேக்கு செய்கை இலகுவானதாக அமைகின்றது.இத்தகைய ஒரு சூழலில் இப்போதுள்ள தேக்கம் காடுகளை உரிய முறையில் பராமரிப்பதாக தெரியவில்லை என்ற ஆர்வலர்களின் சுட்டிக்காட்டலை கவனம் கொண்டு செயற்படுதல் நன்மை பயக்கும் விடயமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை மரக்கூட்டுத்தாபனம்
விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட பல தேக்கம் காடுகளில் இருந்து இலங்கை மரக்கூட்டுத்தாபனம் தேக்கமரங்களை இப்போது வெட்டி எடுத்துச் செல்வதை அவதானிக்கலாம்.
தேக்கம் காடுகளில் இருந்து மரங்களை வெட்டி எடுக்குமளவுக்கு அந்த காடுகளை பராமரிப்பதில் அக்கறை காட்டுவதில்லை என்று ஆர்வலர்கள் தங்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
பல தேக்கம் காடுகளில் உள்ள தேக்குகள் முற்றாக வெட்டி அகற்றப்பட்டு துண்டங்களை பெற்றுக்கொண்டு உள்ளனர்.அதன் பின்னர் புதிய தேக்கம் கன்றுகளை நாட்டியுள்ளனர்
என்ற போதும் விடுதலைப்புலிகள் தங்கள் தேக்கம் காடுகளை உருவாக்கிக் கொண்டது போல இப்போது அதிக கவனம் எடுத்துக் கொள்வதில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டி விபரித்திருந்தனர்.
தேக்கம் காடுகளை உரிய காலங்களில் மரங்களை கிளைந்து கீழ் வரிகளை கட்டுப்படுத்தி பார்வைக்கு அழகிய காட்சித் தோற்றத்தை கொடுக்கும் படி மாற்ற முடியும்.அத்தகைய நல்ல மாற்றங்களை எதிர்பார்த்து தங்களின் சுட்டிக் காட்டல்களை அவர்கள் செய்திருந்தனர் என்பதனை அவர்களுடனான உரையாடலின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.