ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு
கட்சிகளும் மீண்டும் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எழுந்துள்ள ஊகங்களை
நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் நிராகரித்துள்ளார்.
இந்த இரு கட்சிகளுக்குமிடையே எட்டப்படும் எந்தவொரு இணக்கமும், முறையான கட்சி
இணைப்பாக இருக்காது என்றும், அது வெறும் “ஒற்றுமைக்கான ஒரு கட்டமைப்பு” என்ற
அளவில் மட்டுமே இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் இதனை பதிவிட்டுள்ள அவர், ஐக்கிய மக்கள் சக்தி ஏற்கனவே
அதன் தனித்துவமான அடையாளத்தை நிலைநிறுத்தி, “மீண்டும் திரும்ப முடியாத
எல்லையை” கடந்துவிட்டது என்று தெரிவித்தார்.
கூட்டணி
எனவே, அரசியல் வியூகவாதிகள் இணைப்பு பேச்சுக்களைக் கைவிட்டு, அதற்குப் பதிலாக
பரந்த அடிப்படையிலான கூட்டணியை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று
அவர் வலியுறுத்தினார்.

ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எஞ்சிய
பிரிவினர் மற்றும் ஏனைய சிறுபான்மைக் கட்சிகள் அடங்கிய ஒரு கூட்டணியை அவர்
இதற்காகப் பரிந்துரைத்துள்ளார்.

