மாவீரர் அஞ்சலி நிகழ்வுடன் வவுனியா வடக்கு பிரதேச சபை பாதீடு ஏகமனதாக
நிறைவேற்றப்பட்டுள்ளது.
வவுனியா வடக்கு பிரதேச சபையின் ஐந்தாவது சாதாரண கூட்டமானது தவிசாளர்
தி.கிருஸ்ணவேணி தலைமையில் நடைபெற்று இருந்தது.
இதன் போது மாவீரர் நினைவாக தவிசாளர் மற்றும் உபதவிசாளர் வி.சஞ்சுதன்
உள்ளிட்டோர் தீபம் ஏற்றியதுடன், மாவீரர் நினைவு வணக்கத்துடன் சபை அமர்வு
இடம்பெற்றது.
பாதீடு
சபையில் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு முன்வைக்கப்பட்ட போது சபை உறுப்பினர்கள்
23 பேரில் 22 பேர் பிரசன்னமாகி இருந்த நிலையில் ஏகமனதாக பாதீடு ஏற்றுக்
கொள்ளப்பட்டது.
இது தொடர்பில் சபையின் தவிசாளர் கருத்து தெரிவித்த போது, வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டமானது
தயாரிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய வவுனியா வடக்கு பிரதேசத்தை நாங்கள் ஒரு
முன்மாதிரியான பிரதேசமாக மாற்றி அமைக்க வேண்டும் என்ற ஒரு நோக்கத்தோடு நாங்கள்
இந்த வரவு செலவு திட்டத்தை தயாரித்துள்ளோம்.
அந்த வகையில் எங்களுடைய இந்த பிரதேசத்தில் 14 வட்டாரங்கள் காணப்படுகின்றது.
25
கிராம சேவையாளர் பிரிவுகள் காணப்படுகின்றது. எங்களுடைய இந்த பிரதேச சபையின்
ஊடாக சபைக்கான சொந்த வருமானமாக 4 கோடியே 57 லட்சத்து 25 ஆயிரத்தி 500 ரூபாய்
வருகின்றது.
நிதி ஒதுக்கீடு
நாங்கள் அந்த வருமானத்திற்கு ஏற்றவாறு சபையின் நடவடிக்கைகளை உள்வாங்கி கொண்டு
இந்த வரவு செலவு திட்டத்தை தயாரித்துள்ளோம். நாங்கள் எங்களுடைய மக்கள் நலன்
சார்ந்து ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 10 லட்சம் ரூபாயாக ஒதுக்கி இருக்கிறோம்.
அந்த வகையில் 14 வட்டாரத்திற்கும் 1 கோடியே 40 லட்சம் ரூபாயை நாங்கள்
ஒதுக்கியுள்ளோம்.

எங்களுடைய பிரதேசத்தின் சேவைகளை அதாவது ஒவ்வொரு பிரதேசங்களிலும் வீதி
விளக்குகள், வீதி பராமரிப்பு, வீதியை செப்பனிடல், சுடலை பராமரிப்பு, மைதான
பராமரிப்பு ஆகிய வேலைகளுக்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது.
எனவே நாங்கள் எங்களுடைய பிரதேச சபையின் ஊடாக எங்களுடைய இந்த பிரதேசத்தின்
மக்களுடைய நலனில் மிகவும் அக்கறையாக அவர்களுக்கான அந்த சேவைகளை திறம்பட செய்ய
வேண்டும் என்ற பெரிய நோக்கத்தோடு இந்த பாதீட்டை தயாரித்திருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

