ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து மூன்றாவது தேர்தலாக பரபரப்புக்கு மத்தியில்
குட்டி அரசாங்கத்தை அமைக்கும் தேர்தல் என வர்ணிக்கப்படும் உள்ளூராட்சி மன்றத்
தேர்தல் கடந்த 6 ஆம் திகதி நடைபெற்று முடிந்திருக்கின்றது.
குறித்த தேர்தல்
முறை காரணமாக வட்டாரங்களில் சில கட்சிகள் ஆதிக்கம் செலுத்திய போதும் போனஸ்
ஆசனம் காரணமாக ஆட்சியை அமைத்துக் கொள்வதில் நாடு பூராகவும் இழுபறி நிலை
காணப்படுவதுடன், பல கட்சிகளும் கூட்டுக்களை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தி
வருவதையும் அவதானிக்க முடிகிறது.
இந்த நிலையில் வடக்கிலும் இந்த நிலை தீவிரமடைந்துள்ளது. வடக்கில் யாழ்
மாநகரசபை ஆட்சியை அமைப்பதில் இலங்கை தமிரசுக் கட்சி தீவிர முயற்சிகளை
எடுத்துள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அதற்கான
நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றார்.
வவுனியா மாநகரசபை ஆட்சி
மறுபுறம் தமிழ் தேசியப் பேரவையாக
போட்டியிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஆட்சி அமைப்பதில் தீவிரம் காட்டி
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சங்கு கூட்டணியுடன்
பேச்சுக்களை நடத்தியுள்ளார். இது ஒரு புறமிருக்க வவுனியா மாநகரசபை ஆட்சி
அமைப்பதில் தொடரும் இழுபறி பற்றிய ஒரு அலசே இது.
வவுனியா மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களில் ஒன்றாகிய வவுனியா நகரசபை
மாநகர சபையாக தரமுயர்த்தப்பட்ட பின்னர் இடம்பெற்ற முதலாவது தேர்தல் இது. மாநகர
சபையாக தரமுயர்த்த பட்ட போதும் அதனுள் உள்ளடங்கும் நிலப்பரப்பு, வட்டாரங்களின்
எண்ணிகை என்பன அதிகரிக்கப்படாது, மாநகர சபை வட்டாரங்களுடன் இந்த தேர்தல்
இடம்பெற்றது.

இதன்படி தாண்டிக்குளம், பட்டானிச்சி புளியங்குளம்,
பண்டாரிக்குளம், வைரவபுளியங்குளம், குடியிருப்பு, கடைத்தொகுதி, மூன்று
முறிப்பு, இறம்பைக்குளம், சின்னப்புதுக்குளம், கோவில்குளம் என முறையே 10
வட்டாரங்களில் இருந்து 12 உறுப்பினர்களும், போனஸ் மூலம் 9 உறுப்பினர்களும் என
21 உறுப்பினர்களை கொண்டதே வவுனியாவின் புதிய மாநகரசபை.
இதில்
பட்டாணிச்சிபுளியங்குளம், மூன்று முறிப்பு என்பன இரட்டைத் தொகுதிகளைக் கொண்டது.
வவுனியா மாநகர சபை எல்லைக்குள் பதிவு செய்யப்பட்ட வாக்குகள்-20,609 ஆகும்.
அதில் அளிக்கப்பட்ட வாக்குகள்-12,700. அளிக்கப்பட்ட வாக்குகளிலும் 188
வாக்குகள் நிராகரிக்கப்பட்டவை. அதன்படி செல்லுபடியான வாக்குகள் 12,512 ஆகும்.
இதில்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 2,350 வாக்குகள் – 4 உறுப்பினர்கள் (போனஸ்-1)
தேசிய மக்கள் சக்தி – 2,344 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி – 2,293 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்
இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 2,185 வாக்குகள் – 3 உறுப்பினர்கள் (போனஸ்-3)
ஐக்கிய மக்கள் சக்தி – 1,088 வாக்குகள் – 2 உறுப்பினர்கள் (போனஸ்-2)
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 647 வாக்குகள் – 1 உறுப்பினர் (போனஸ்-1)
ஜனநாயக தேசிய கூட்டணி – 630 வாக்குகள் – 1 உறுப்பினர் (போனஸ்-1)
சுயாதீன குழு1 – 332 வாக்குகள் – 1 உறுப்பினர் (போனஸ்-1)
சுயாதீன குழு 2 – 326 வாக்குகள் – 1 உறுப்பினர் என்பன உறுப்பினர்களைப்
பெற்றுள்ளது.
இந்த நிலையில் தனித்து எவரும் ஆட்சி செய்ய முடியாத திரிசங்கு
நிலையில் வவுனியா மாநகர சபையும் உள்ளதுடன், முதலாவது மேயர் யார் என்ற
மும்முனைப் போட்டி இடம்பெறுவதுடன், கூட்டணிக் கட்சிகளுக்குள்ளும் குழப்ப நிலை
ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
மேயர் பதவி
குறித்த குழப்பம் மேயர், பிரதி மேயர்
என்கின்ற பதவிக்கானதே தவிர மக்கள் சேவை செய்வதற்கானது அல்ல.
குறிப்பாக வவுனியா மாநகர சபையில் 2 இட்டைத் தொகுதிகளையும் கைப்பற்றிய காதர்
மஸ்தான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் கட்சி 4 ஆசனங்களுடனும், கடைத்தொகுதி,
வைரவபுளியங்குளம், குடியிருப்பு, கோவில்குளம் ஆகிய நான்கு வட்டாரங்களையும்
வென்ற தேசிய மக்கள் சக்தி 4 ஆசனங்களுடனும், தாண்டிக்குளம், இறம்பைக்குளம்,
சின்னப்புதுக்குளம் ஆகிய மூன்று வ்ட்டாரங்களில் வென்று ஒரு போனஸ் ஆசனத்துடன்
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 4 ஆசனங்களுடனும் முன்னிலையில் உள்ளன.
இந்த
மூன்று கட்சிகளும் தாம் ஆட்சி அமைப்பதற்கு ஆர்வம் காட்டி வருவதுடன் ஏனைய
கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும்
வருகின்றன. இந்த நிலையில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்திகளாக சுயேட்சைக்
குழுக்கள் மாறியுள்ளமை இங்கு அவதானிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

தேர்தல் முடிவு வெளியாகிய மறுநாளில் இருந்து வவுனியா மாநகர சபை ஆட்சி அமைப்பது
தொடர்பான பேச்சுக்கள் அரசியல் கட்சி மட்டங்களிலும், சிவில் சமூக
செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில் காதர்
மஸ்தான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் கட்சி (4 உறுப்பினர்), ஜனநாயக தமிழ்
தேசியக் கூட்டணி (4 உறுப்பினர்), இலங்கை தமிழரசுக் கட்சி (3 உறுப்பினர்),
சுயேட்சைஎ குழு 01 (1 உறுப்பினர்) இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பான பேச்சுக்கள்
இடம்பெற்று வருகின்றன.
இதில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணிக்கு மேயர்
பதவியும், இலங்கை தொழிலாளர் கட்சி ஆதரவு சார் சுயேட்சைக் குழு -01 இற்கு
பிரதி மேயர் பதவியும் என பேரம் பேசப்பட்டு வருகின்றது. எனினும் ஜனநாயக தமிழ்
தேசியக் கூட்டணி மற்றும் தமிழரசுக் கட்சி இதனை இன்னும் இறுதி செய்யாமல் உள்ளது.
மறுபுறம், தேசிய மக்கள் சக்தி (4 ஆசனம்), இலங்கை தொழிலாளர் கட்சி (4 ஆசனம்),
சுயேட்சை குழு -01 (1 ஆசனம்), சுயேட்சை குழு-02 (1 ஆசனம்), ஜனநாயக தேசியக்
கூட்டணி (1 ஆசனம்) இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பிலும் பேச்சுக்கள்
இடம்பெற்றுள்ளன.
இதில் மேயர் தேசிய மக்கள் சக்திக்கு எனவும், இலங்கை தொழிலாளர்
கட்சி ஆதரவு சுயேட்சைக்குழு -01 இற்கு பிரதி மேயர் எனவும் பேசப்பட்டுள்ளது.
இதன்போது பிரதி மேயர் பதவி தமக்கு தரப்பட வேண்டும் என ஜனநாயக தேசியக் கூட்டணி
கோரி, அந்த கட்சி இந்த முயற்சியில் இருந்து வெளியேறியுள்ளது. அதன் பின் ஐக்கிய
மக்கள் சக்தியுடன் (2 ஆசனம்) இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பிலும் பேச்சுக்கள்
நடைபெறுகின்றது.
இதுதவிர, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி (4 ஆசனம்), இலங்கை தமிழரசுக் கட்சி (3
ஆசனம்), ஐக்கிய மக்கள் சக்தி (2 ஆசனம்), அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (1
ஆசனம்), ஜனநாயக தேசியக் கூட்டணி (1 ஆசனம்), சுயேட்சைக் குழு -02 (1 ஆசனம்)
இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பிலும் பேச்சுக்கள் இடம்பெறுகின்றது.
இதில்
ஜனநாயக தமிழ் தேசிக் கூட்டணிக்கு மேயர் பதவியும், ஜனநாயக தேசியக் கூட்டணிக்கு
பிரதி மேயர் பதவி குறித்தும் பேசப்பட்டுள்ளது. இருப்பினும் இலங்கை தமிழரசுக்
கட்சி இந்தக் கூட்டணியில் பிரதி மேயர் பதவியை பெறுவது குறித்தும் கவனம்
செலுத்தியுள்ள நிலையில் இந்தக் கூட்டு முயற்சியும் இறுதி செய்யப்படவில்லை.
மழை விட்டும் தூவணம் நின்றபாடில்லை என்பது போல் தேர்தல் முடிந்து ஒரு வாரம்
நெருங்கும் நிலையிலும் ஆட்சி அமைப்பது தொடர்பில் கட்சிகளால் ஒரு இணக்கப்பாட்டை
ஏற்படுத்த முடியாத நிலையில வவுனியா மாநகரசபை இருப்பதுடன், இங்கு சுயேட்சைக்
குழுக்கள் இரண்டும் ஆட்சியை தீர்மானிப்பதில் தாக்கம் செலுத்தக் கூடிய
சக்திகளாகவும் மாறியுள்ளன.
குழப்ப நிலை
அத்துடன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஜனநாயக
தேசியக் கூட்டணி என்பவற்றின் ஒவ்வொரு ஆசனமும் ஆட்சி அமைக்க தீர்மானம்
மிக்கவையாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு ஆட்சி அமைப்பது தொடர்பான குழப்பங்கள் ஒரு புறமிருக்க, ஜனநாயக தமிழ்
தேசியக் கூட்டணிக்குள் யார் மேயர் என்கின்ற குழப்ப நிலையும் தலை
தூக்கியுள்ளது.
பொதுவாக பிரதான கட்சிகளான தேசிய மக்கள் சக்தி, இலங்கை
தொழிலாளர் கட்சி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி, இலங்கை தமிழரசுக் கட்சி
என்கின்ற நான்கு கட்சிகளுக்குள்ளும் தேசிய மக்கள் சக்தி தவிர்ந்த ஏனைய
கட்சிகளில் மாநகரத்தின் மேயராக நிறுததக் கூடிய பொருத்தமான ஒருவர் இல்லை
என்கின்ற குற்றச்சாட்டு கட்சிகளாலும், பொது மக்களாலும் முன்வைக்கப்பட்டும்
வருகின்றது.

இதனால் சுயேட்சைகள் அல்லது ஏனைய கட்சிகளின் உதவியைப் பெறும
நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளன.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியைப் பொறுத்த வரை ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப்,
ஜனநாயக போராளிகள் கட்சி என நான்கு கூட்டுக்களை கொண்டுள்ளது. அதில் ரெலோ
வவுனியா மாநகரசபை, ஈ.பி.ஆர்.எல்.எப் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, புளொட்
வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, ஜனநாயக போராளிகள் கட்சி வவுனியா வக்கு பிரதேச
சபை என தேர்தலுக்கு முன்னரே பிரிக்கப்பட்டு, அவர்கள் தலைமையில் ஆட்சி அமைப்பது
எனவும் கூட்டணி மட்டத்திலும் இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது.
அதன்படி ரெலோ
தமது கட்சி சார்பாக பட்டியல் வேட்பாளராக மாநகரசபைக்கு முன்னாள் வடமாகண சபை
உறுப்பனர் செந்தில்நாதன் மயூரன் அவர்களை நிறுத்தியிருந்தது. அவருக்கே மேயர்
பதவியை வழங்க கட்சி தீர்மானித்து இருந்தது. ஆனால் கட்சி 3 வட்டாரங்களில்
வென்றுள்ள நிலையில், கிடைதத ஒரு ஆசனத்திற்கு பெண் ஒருவரை நியமிக்குமாறு
அறிவுறுத்தல் கிடைத்தமையால் செந்தில்நாதன் மயூரன் உட் செல்ல முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது.
வென்ற 3 உறுப்பினர்களில் இருவர் புளொட் சார்பானவர்கள், ஒருவர்
ஈபிஆர்எல்எப் சார்பானவர்கள். இதனால மேயராக தமது கட்சி ஒருவரை பட்டியல் ஊடாக
கொண்டு வர ரெலோ கடும்பிரயத்தனம் செய்கின்றது. பெண் ஒருவரை உள்வாங்கி அவருக்கு
மேயர் பதவியை கொடுக்கவும் ரெலோ முயற்சி எடுத்து வருகின்றது. சிறிது காலத்தின்
குறித்த பெண்ணை பதவி விலக செய்யப் பண்ணி செந்தில்நாதன் மயூரனை கொண்டு
செல்லலாமா என்பது குறித்தும் ஆராய்ந்து வருகிறது.
கடும் முரண்பாடுகள்
21 உறுப்பினர்களைக் கொண்ட வவுனியா மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி சார்பாக
ஒரு பெண் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக இரு
பெண்கள் போனஸ் ஆசனம் ஊடாக செல்லவுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த இரு
போனஸ் ஆசனங்களிலும் இரு பெண்கள் தெரிவு செய்யப்பட்டால் 5 பேர் உறுப்பினர்களாக
இருக்க வாய்ப்புள்ளது. இதனால் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி பட்டியல் ஊடாக
தெரிவு செய்யும் பெண்ணை மாற்ற வாய்ப்பு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இது
ரெலோவின் செந்தில்நாதன் மயூரன் உட்செல்ல வாய்ப்பாக அமைந்து விடும்.
ஆனால், வட்டாரத்தில் வெற்றியீட்டிய முன்னாள் நகரசபை உறுப்பினரும், ஆசிரியருமான
சு.காண்டீபன் தனக்கு மேயர் பதவி வழங்க வேண்டும் என கோரியுள்ளதுடன், அவரது
ஆதரவாளர்களும் அதனையே கோரியுள்ளனர்.

இதனால் காண்டீபன் பிரதிநிதித்துவப்படுத்தும்
புளொட் அமைப்புக்கும், மேயர் பதவிக்கு பொறுப்பான ரெலோ அமைக்கும் இடையில் மேயர்
பதவி தொடர்பில் கடும் முரண்பாடுகள் கூட்டணிக்குள் எழுந்துள்ளதையும் மறுத்து
விட முடியாது.
ஆக, கிராமிய, பிரதேச அபிவிருத்தியுடன் தொடர்புடைய ஒரு சபையைக் கூட ஒற்றுமையாக
அமைத்து அதனை நிர்வகித்து மக்களுக்கான அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு
கட்சிகளும், அதன் தலைவர்களும் தயாராகவில்லை எனபது வெளிப்படையாக தெரிவதுடன்,
கதிரைகளுக்கான போட்டிகளே முதன்மை பெறுவதையும் அவதானிக்க முடிகின்றது.
இத்தகைய
நிலை யுத்தத்தால் பாதிப்படைந்து மீள் எழுச்சி பெற்று வரும் தமிழ் தேசிய
இனத்திற்கும், பல்லின சமூகம் வாழும் வவுனியா மாவட்டத்தின் அபிவிருத்திக்கும்
பொருத்தமானது அல்ல. மக்கள் வாக்குளைப் பெறுவது மட்டும் முக்கியமல்ல. கட்சி
தலைமைகளினதும், வென்ற உறுப்பினர்களினதும் மனநிலையில் மாற்றம் வர வேண்டும்.
அவர்களிடத்தில் விட்டுக் கொடுப்பு, சகிப்பு தன்மை, தியாக மனப்பான்மை, உதவி
செய்யும் எண்ணம் இருக்க வேண்டும். அதுவே சபைகளை தொடர்ந்தும் ஆரோக்கியமாக
முன்நகர்த்த முடியும். அல்லது விடின் சபைகளுக்குள் தொடர்ந்தும் சண்டைகளும்,
சச்சருவுகளும் ஏற்பட்டு மக்கள் தேர்தல் மீது வெறுக்கும் நிலையை உருவாக்கும்.
எனவே, சிந்தித்து செயற்பட வேண்டியது அனைவரதும் பொறுப்பாகும்.

