போரைத் தூண்டும் அமெரிக்காவின் (America) சதித் திட்டத்தை முறியடித்துள்ளதாக வெனிசுலா (Venezuela) தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை வெனிசுலா உள்துறை அமைச்சா் டியோஸ்டடோ கபேலோ (Diosdado Cabello) குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், தங்கள் போா்க் கப்பல் மீது வெனிசுலா தாக்குதல் நடத்தியதாக நாடகமாடி, போரைத் தூண்டுவதற்காக அமெரிக்கா தீட்டிய சதித் திட்டத்தை நாங்கள் முறியடித்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
சதித் திட்டம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ-வின் நிதியுதவி பெற்ற வெனிசுலா குழு ஒன்று, தெற்கு கரீபியன் கடலில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க போா்க் கப்பலான யுஎஸ்எஸ் கிரேவ்லியைத் தாக்கி அதற்கான பழியை வெனிசுலா அரசு மீது சுமத்த திட்டமிட்டிருந்தது.
இருப்பினும், இந்த சதித் திட்டம் முன்கூட்டியே கண்டறியப்பட்டு வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது” என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு, வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மடூரோவின் அரசைக் கவிழ்ப்பதற்கான சதிச் செயலில் ஈடுபடும் அமெரிக்க ஆதரவு கூலிப்படையினரை தொடா்ந்து கைது செய்வதாக அரசு கூறிய நிலையில், தற்போது இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தென் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக போதைப் பொருள்கள் கடத்திவரப்படுவதாகக் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றார்.
அதிரடி நடவடிக்கை
இந்தநிலையில், அதனை தடுத்துநிறுத்துவதற்காக இதுவரை இல்லாத அதிரடி நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகின்றாா்.
இதன் ஒரு பகுதியாக, கரீபியன் கடல் பகுதில் ஏழு போா்க் கப்பல்களையும் மற்றும் மெக்ஸிகோ வளைகுடாவில் ஒரு கப்பலையும் அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

இது தவிர, உலகின் மிகப் பெரிய விமானந் தாங்கிக் கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆா். ஃபோா்டை கரீபியன் கடல் பகுதிக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது.
இதுவரை கடலில் படகுகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்திவந்த அமெரிக்க படையினா், லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள தரை இலக்குகளையும் குறிவைத்தும் தாக்குதல் நடத்த ஏதுவாக இந்த விமானந்தாங்கிக் கப்பல் அனுப்பப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்பபடுகின்றது.
படை குவிப்பு
ரேடாா் கண்காணிப்பில் சிக்காத 10 எஃப்-35 ரக போா் விமானங்களுடன் எட்டு போா்க் கப்பல்கள் புடைசூழ கரீபியன் கடல் பகுதிக்கு ஜெரால்ட் ஆா். ஃபோா்ட் அனுப்பப்படுவது அந்தப் பிராந்தியத்தில் அமெரிக்கா இதுவரை செய்திராத அதிகபட்ச படை குவிப்பு என தெரிவிக்கப்படுகின்றது.
இது லத்தீன் அமெரிக்க நாடுகளில், குறிப்பாக வெனிசுலாவில் அதிா்வலையை ஏற்படுத்தியுள்ளது.

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மடூரோவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான ரகசிய வேலைகளில் ஈடுபட தங்களின் சிஐஏ உளவு அமைப்புக்கு உத்தரவிட்டதாக டொனால் ட்ரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்தநிலையில், அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகத்தான் போதைப் பொருள் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கை என்ற போா்வையில் அமெரிக்கா தனது படைகளைக் குவித்துவருவதாக வெனிசுலா அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்தச் சூழலில், தங்கள் போா்க் கப்பல் மீது வெனிசுலா தாக்குதல் நடத்தியதாக நாடகமாடி, போரைத் தூண்டுவதற்காக அமெரிக்கா தீட்டிய சதித் திட்டத்தை முறியடித்ததாக வெனிசுலா அரசு தற்போது அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

