2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (14.11.2025) மாலை நடைபெறவுள்ளது.
அதன்படி, குறித்த வாக்கெடுப்பு இன்று (14.11.2025) மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை கடந்த நவம்பர் 7ஆம் திகதி நிதி அமைச்சரும், ஜனாதிபதியுமான அநுரகுமார திசாநாயக்க, நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
ஒதுக்கீட்டு சட்டமூலம்
அதன்படி, ஒதுக்கீட்டு சட்டமூலத்துடன் தொடர்புடைய வரவு செலவுத் திட்ட விவாதம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெறும்.

இதேவேளை, வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழு நிலையின் விவாதம் நாளை (15.11.2025) முதல் 17 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடத்தப்படவுள்ளது.
வரவு செலவுத் திட்டக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர்த்து ஏனைய நாட்களில் வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெறும் என்று பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று (14.11.2025) நடைபெறவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பிற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

