தமிழ்த் தேசிய அரசியலில் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் பொது வேட்பாளருக்கு அளித்துள்ள வாக்கு தமிழ்த் தேசிய அரசியலில் தன்னார்வ எழுச்சியின் சாட்சியம் ஆகிறது. இவ்வெற்றியின் உரிமை கோரல் தமிழ் மக்களுக்கு மாத்திரமே உண்டு என அனைத்துலக தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் தமிழ் மக்களின் தன்னார்வ எழுச்சிக்கான வாய்ப்பை அடையாளங்காட்டிய வடக்கு-கிழக்கு சிவில் சமுகங்களின் கூட்டிணைவான தமிழ் மக்கள் பொதுச்சபை, இவ் எழுச்சியை நிறுவனமயப்படுத்தி பாதுகாக்க வேண்டிய பாரிய வரலாற்றுப் பொறுப்பு பெற்றுள்ளார்களென அந்த ஒன்றியம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தொடர்பாக அனைத்துலக தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் இன்று (29) வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் மேற்குறிப்பிட்ட விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தமிழ்ப் பொதுவேட்பாளர்
இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள், தேர்தலுக்கு முன்னரான சூழலில் போலித் தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட சதி கோட்பாடுகளை தகர்த்துள்ளது. ‘நமக்கு நாம்’ என்ற வரியில், தமிழ் மக்களின் தன்னார்வ எழுச்சி, சுயநிர்ணய உரிமைசார் தீராத் தாகத்தை வெளிப்படுத்தியிருந்தது.
தமிழ்ப் பொதுவேட்பாளர் கடுமையான நெருக்கடிக்குள், குறுகிய காலத்துக்குள் மக்களிடையே எழுச்சியை உருவாக்கி உள்ளதாயின், தேசியம் சார்ந்த விதை ஆழமாக பதிந்துள்ளமையே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்ப் பொதுவேட்பாளர் போலித்தேசியவாதிகளையும் தெளிவாக அடையாளப்படுத்தி உள்ளது. தமிழ் பொது வேட்பாளர் மீதான தமிழ்த் தேசியத்தின் திரட்சி தமது வாக்கு வங்கிகளை பலவீனப்படுத்துமென தமிழரசுக் கட்சியின் சுமந்திரன்-சாணக்கியன் அணியினர் பொது வேட்பாளரை தோற்கடிப்போமென சூளுரைத்தனர்.
அவ்வாறே தாமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் புறக்கணிப்பு அரசியல் என்ற பிரசாரத்தை தமிழ்ப் பொதுவேட்பாளர் எதிர்ப்பாக மாத்திரமே கட்டமைத்தனர். இவ் இருதரப்பினதும் நேரடியான எதிர்ப்பு போலித் தேசியவாதத்தை அம்பலப்படுத்தியது.
தமிழ்ப் பொது வேட்பாளருக்கான ஆதரவு
இவர்களை விட ஆபத்தானவர்களாக தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரிப்பதாக தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பில் அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டு, தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவான பிரசார செயற்பாடுகளை செய்யாது, தமது ஆதரவாளர்கள் ஊடாக தென்னிலங்கை வேட்பாளருக்கு பிரசாரத்தை மேற்கொண்டு உள்ளார்கள்.
தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் (புளொட்) ஆகிய இரண்டு அரசியல் கட்சிகளும் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக இதய சுத்தியுடன் செயற்பட்டிருக்கவில்லை என்பதை தேர்தல் காலத்தின் கள ஆய்வுகளோடு, தேர்தல் முடிவுகள் உறுதி செய்கின்றது.
மேலும் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்புக்குள் அங்கம் வகிக்காத போதிலும், தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிப்பதாக கருத்துரைத்த தமிழரசுக்கட்சியின் தெரிவு செய்யப்பட்ட சிவஞானம் சிறீதரன், தமிழ்ப் பொது வேட்பாளருக்கான ஆதரவை இதய சுத்தியுடன் முழுவீச்சுடன் செயற்படுத்தி இருக்கவில்லை.
தமிழ் மக்கள் தமது நம்பிக்கையை ஆணையை சிவில் சமூக கூட்டினைவான தமிழ் மக்கள் பொதுச்சபையிடமே வழங்கி உள்ளார்கள். எனவே தமிழ் மக்கள் பொதுச்சபைக்கு வலுவான பொறுப்புடைமை வழங்கப்பட்டுள்ளது.
இனப்படுகொலைக்கு பொறுப்பு
இப்பின்னனியில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பிற்குள், போலித் தேசியவாதிகளை வேறுபடுத்தி அணுக வேண்டிய தேவைப்பாடு, சமவலு பங்குதாரராக உள்ள தமிழ் மக்கள் பொதுச்சபையிடம் காணப்படுவதை சுட்டிக்காட்டுகிறோம்.
தென்னிலங்கை அரசாங்கத்திடம் இனப்படுகொலைக்கு பொறுப்பு கூற வேண்டும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். இச்சமுகம் தமக்குள் உள்ளக அரசியலில் பொறுப்புக் கூறலை பேணாமை முரணான அரசியல் வெளிப்பாடாகும். இதனை தமிழ் மக்கள் பொதுச்சபையும் மரபாக கடந்து செல்ல முடியாது.
தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் மாற்றம், ஏதோ ஒரு வகையில் தமிழர் தாயக பகுதிக்கும் பொருத்தமானதாகும். எனவே புதிய மாற்றங்களை உள்வாங்கும் புதிய அரசியல் இயக்கமாகவே தமிழ் மக்கள் பொதுச்சபையின் தேவை மக்கள் மத்தியில் உணரப்படுகின்றது.
இதனை பூர்த்தி செய்யும் வகையிலேயே தமிழ் மக்கள் பொதுச்சபையின் பணிகளும், செயற்பாடுகளும் கட்டமைக்கப்படுவதும் அவசியமாகும்“ என அனைத்துலக தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.