இலங்கை பிரஜைகளுக்கான டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்குவதை இந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கும் அரசாங்கத்தின் முடிவு தொடர்பில் மக்கள் போராட்ட முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த எச்சரிக்கையானது, மக்கள் போராட்ட முன்னணியால் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திற்கு (Vijitha Herath) அனுப்பட்ட கடிதத்தில் விடுக்கப்பட்டுள்ளது.
பாரிய ஆபத்து
அமைச்சருக்கு அனுப்பட்ட கடிதத்தில், தற்போதைய ஜனாதிபதியின் இந்திய அரச பயணத்தின் போது செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம், இலங்கை பிரஜைகளுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் அதிகாரம் இந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என அமைச்சர் விஜித ஹார்த் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமைச்சரின் அறிக்கையின்படி, இந்த ஒப்பந்தம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை 2025 ஜனவரியில் அரசாங்கம் இறுதி செய்யுள்ளமையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஒரு நாடு தனது மக்களின் தகவல்களையும் தரவுகளையும் மற்றொரு வெளிநாட்டு நாட்டிற்கு வழங்குவது பாரிய ஆபத்து என மக்கள் போராட்ட முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.
மறுஆய்வு செய்ய வலியுறுத்து
இதேவேளை, ஒரு தேசம் தனது மக்களின் தகவல்களை வேறொரு நாட்டிலிருந்து பெறுவதன் மூலம் கூட அடிபணிய வைக்க முடியும் என்றும் அந்த மூலோபாயத் தலையீட்டை இந்தியா இன்று இலங்கையில் செய்து வருகிறதாகவும் முன்னணி கூறியுள்ளது.
இவ்வாறனதொரு பின்னணியில், இலங்கை மக்களின் பொது பாதுகாப்பு பெரும் ஆபத்தில் உள்ளதாகவும் ஒரு இந்திய நிறுவனத்திற்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்க அனுமதித்தமையை மறுஆய்வு செய்வது மிகவும் அவசியம் எனவும் மக்கள் போராட்ட முன்னணி வலியுறுத்தியுள்ளது.