மக்களுக்கு நலன்புரித்திட்டங்களை முன்னெடுப்பதற்கு தேர்தல் சட்டங்கள் தடையாக அமையாது என சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.
அரசாங்கத்தினால் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் நலன்புரித் திட்டங்கள் தேர்தல் சட்ட மீறலாக அமையாது என சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபம பெஸ்குவல் தெரிவித்துள்ளார்.
தேர்தல் சட்டங்களை பாதிக்காத வகையில் அரசாங்கத்தின் அனைத்து நலன்புரி திட்டங்களும் வழமை போன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
சம்பள அதிகரிப்பு
அரசாங்கம் அண்மையில் சம்பள அதிகரிப்பு, விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு நிவாரணங்கள், மானியங்கள் வழங்குவதாக அறிவித்திருந்தது.
இவ்வாறான நிவாரணங்களை தேர்தலின் பின்னரே வழங்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தது.
தேர்தலை இலக்கு வைத்து அரசாங்கம் இவ்வாறு அறிவிப்புக்களை வெளியிடுவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
எனினும், அஸ்வெசும போன்ற வழமையான சமூக நலன்புரித் திட்டங்களை வழங்குவதில் எவ்வித சிக்கலும் கிடையாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.