இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) தேசியப் பட்டியல் ஆசனத்தை யாருக்கு வழங்குவது என்பது குறித்து தீர்மானிப்பதற்காக அக்கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அரசியல்குழுக் கூட்டம் இன்று (17) காலை பத்து மணிக்கு வவுனியாவில் (Vavuniya) உள்ள அக்கட்சியின் மாவட்டக்கிளை காரியாலயத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த பத்தாவது நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு வடக்கு, கிழக்கில் ஏழு ஆசனங்கள் கிடைத்துள்ள நிலையில் தேசியப் பட்டியலில் ஆசனமொன்று ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆசன ஒதுக்கீடு
குறித்த ஆசனத்தினை இம்முறை யாழ்.தேர்தல் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யுமாறு கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றதாக குறிப்பிடப்படுகின்றது.
யாழ்.தேர்தல் மாவட்டத்தில் ஒரு ஆசனத்தையே தமிழரசுக்கட்சியால் பெற்றுக்கொள்ள முடிந்தமையாலும், தேசிய மக்கள் சக்தி அங்கு மூன்று ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளமையாலும் தேசியப் பட்டியல் ஆசனம் யாழ்ப்பாணத்துக்கே வழங்கப்பட வேண்டும் என்பது அந்த உறுப்பிர்களின் கருத்தாகவுள்ளது.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இதேவேளை, தேசியப் பட்டியல் ஆசனத்தினை சுமந்திரனுக்கு (M. A. Sumanthiran) வழங்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் அதிகரித்துள்ள போதும் சுமந்திரன் தேசியப் பட்டியல் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ளப்போவதில்லை என்று பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
மேலும், கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவுக்கு (Mavai Senathirajah) வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளதுடன் பெண் ஒருவருக்கு தேசியப்பட்டியல் ஆசனத்தினை ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.