முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச தொடர்பில் தகவல்கள் வழங்கியுள்ளதாகவும் இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டுமெனவும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், பசில், சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை குவித்த குற்றச்சாட்டுக்கள் பற்றிய பல்வேறு தகவல்களை வழங்கியுள்ளோம்.
யார் திருடன் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அரசாங்கம் சிறு சிறு மோசடிகளில் ஈடுபட்டவர்களை பிடிக்காது, பாரிய மோசடிகளில் ஈடுபட்டவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விசாரணை
பசில் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை குவித்துள்ளார். என்பது குறித்து தாம் வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டது.
சில ஆண்டுகளுக்கு முன்னதாக தொலைக்காட்சி ஒன்றுக்கு தாம் வழங்கிய செவ்வியின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில், தமக்கு தெரிந்த அனைத்து தகவல்களையும், சில ஆவணங்களையும் குற்ற புலனாய்வு பிரிவிடம் ஒப்படைத்துள்ளோம்.
தாம் வழங்கிய தகவல்கள் ஒரு பகுதி மட்டுமே. அந்தப் பகுதியிலும் பசில் ராஜபக்ச பாரிய அளவில் சொத்துக்களை குவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் பசில் ராஜபக்ச அமெரிக்காவில் வேலை எதனையும் செய்யவில்லை. அவர் இலங்கையில் சம்பாதித்த பணத்தில் சொத்துக்களை சேர்த்து உள்ளார்.
வெளிநாட்டில் சொத்து சேர்ப்பு
அமெரிக்காவில் அவரது சொத்துக்கள் இருந்தால் அதுவும் இலங்கையில் உழைத்த பணத்தில் பெற்றுக் கொள்ளப்பட்டவையாக இருக்க வேண்டும். பசில் ராஜபக்சவின் அமெரிக்க சொத்துக்கள் குறித்து தாம் கருத்துக்களை வெளியிடுவோம்.
பசில் ராஜபக்ச பற்றிய விபரங்களை முதலில் வழங்குவோம். இந்த தகவல் அடிப்படையில் உரிய விசாரணை நடத்தப்பட்டால் ஏனைய மோசடிகள் பற்றிய தகவல்களையும் வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலில் இந்த விசாரணைகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பது குறித்து கண்காணிக்கப்படும். அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிரான சட்டமும் பசில் ராஜபக்சவிற்கு எதிரான சட்டமும் வெவ்வேறானவை.
அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூர் பிரஜை, பசில் ராஜபக்ச அமெரிக்க மற்றும் இலங்கை குடியுரிமை கொண்ட ஒரு இரட்டை பிரஜா உரிமை கொண்டவர்” என கூறியுள்ளார்.