13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பொலிஸ் அதிகாரம் இல்லாமல் மத்திய அரசிடம் இருந்து வேறு பல அதிகாரங்களை பெற்றுக்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஏனைய அதிகாரங்கள் பற்றி பின்னர் கலந்துரையாட முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஸ்ட தலைவர் இரா.சம்பந்தனின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இதன்போது அவர் மேலும் கூறுகையில்…,
மக்கள் சபை முறை
புதிய பரிந்துரையாக, அதிகாரப் பகிர்வில் 13 ஆவது திருத்தத்தின் கட்டமைப்பிற்குள் அதிகபட்ச அதிகாரத்தை பரவலாக்குவதற்கு அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
மேலும், நவாஸ் ஆணைக்குழு அறிக்கை குறித்தும் கலந்துரையாடப்பட உள்ளது.
ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்ட மூலத்தை (TRC) முன்வைக்கத் தயார் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் என்னிடம் தெரிவித்தார்.
இலங்கை மக்களின் உரிமை
அதுமட்டுமல்லாமல், மக்கள் சபை முறை குறித்தும் இப்போது கலந்துரையாடி உடன்பாடு எட்டியுள்ளோம்.
இந்த கலந்துரையாடல்களை முன்னோக்கி கொண்டு சென்று நிறைவு செய்ய நாம் எதிர்பார்க்கின்றோம்.
சம்பந்தன் தமிழ் மக்களின் உரிமைக்காக பாடுபட்ட தலைவர், சம்பந்தன் இலங்கை மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த தலைவர்.
நாம் இருவரும், பிரிக்கப்படாத இலங்கைக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்கள். அதற்காக நாங்கள் இருவரும் உடன்பாட்டுடன் கலந்துரையாடல்களை முன்னோக்கி கொண்டு சென்றதுடன் இப்பணியை நிறைவு செய்ய அனைவரும் ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.’’ என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.