யாழில் (Jaffna) இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று 80 இலட்சம் ரூபாய் பணத்தை அபகரித்த நான்கு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றைய தினம் (09.02.2025) யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவு காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வெளிநாடு செல்வதற்காக ஆசைப்பட்ட இளைஞரொருவரிடம் 80 இலட்சம் ரூபாய் வரையான பணத்தை வங்கியில் வைப்பிலிட்டு வங்கி அறிக்கையை நேரடியாக வந்து தமக்கு காட்டுமாறு வெளிநாட்டு முகவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
யாழ். குற்றத் தடுப்பு பிரிவு
இதனை நம்பி சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதிக்குச் சென்ற இளைஞனை காரில் கடத்திச் சென்ற குறித்த குழு இளைஞரின் வங்கிக் கணக்கில் இருந்த 80 இலட்சம் ரூபாய் வரையான பணத்தை மற்றுமொருவரின் வங்கி கணக்கிற்கு மாற்றிவிட்டு இளைஞரை கோப்பாய் பகுதியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளைஞர் யாழ்ப்பாணம் யாழ். காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தார்.
இதையடுத்து சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பணம் மாற்றப்பட்ட வங்கி கணக்கிற்கு உரித்தான பெண்ணொருவரை கைது செய்ததுடன் கடத்தலில் ஈடுபட்ட மேலும் மூவரை கைது செய்துள்ளனர்.
யாழ். நீதிவான்
இந்நிலையில் குறித்த பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து பணம் வேறொரு வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் பணத்தை மீட்பது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கைதான நான்கு சந்தேக நபர்களையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.