அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயர் தேர்தலில் ஜோஹ்ரான் மம்தானி (Zohran Mamdani)வெற்றி பெற்றால் நியூயோர்க் நகரத்திற்கான நிதியை நிறுத்துவேன் என ஜனாதிபதி ட்ரம்ப் அச்சுறுத்திய நிலையிலும் அந்நகரத்தின் மேயராக ஜோஹ்ரான் மம்தானி பெரு வெற்றிபெற்றுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம், நியூயோர்க் நகரத்தின் அரசியல் வரலாற்றிலேயே முதல் இந்திய-அமெரிக்க முஸ்லிம் மேயர் என்ற வரலாற்றுச் சாதனையை ஜோஹ்ரான் மம்தானி படைத்துள்ளார்.
தீவிர தேர்தல் பிரசாரம்
அமெரிக்காவின் முக்கிய அரசியல் பதவிகளில் இளம் வயதிலேயே (34) இவர் பொறுப்பேற்றுள்ளது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இவர் நடத்திய தீவிர தேர்தல் பிரசாரம் இவருக்கு இந்த மாபெரும் வெற்றிக்கு வழி வகுத்து இருக்கிறது.

credit -reuters
ஜோஹ்ரான் மம்தானி ஜனாதிபதி ட்ரம்பின் கொள்கைகளையும், ட்ரம்பையும் கடுமையாக விமர்சித்து இருந்தார். ஏனெனில் நியூயோர்க் நகரம் அமெரிக்காவின் மிக முக்கியமான நகரமாகும். இந்த நகரில் நடக்கும் அரசியல் மாற்றம், நாடு முழுவதும் எதிரொலிக்கும். இந்த தேர்தல் சர்வதேச கவனத்தை பெற்றது.
ட்ரம்பிற்கு ஒரு நேரடி செய்தி
நியூயோர்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோஹ்ரான் மம்தானி தனது வெற்றி உரையின் போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு ஒரு நேரடி செய்தியை வழங்கினார்.

“நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும் என்பதால், உங்களுக்காக நான்கு வார்த்தைகள் என்னிடம் உள்ளன: ஒலியை அதிகரிக்கவும்,”என மம்தானி கூறினார்.

