‘சொந்தமான இடம் அழகான வாழ்க்கை’ என்ற தற்போதைய அரசாங்கத்தின் விசேட வேலைத்திட்டத்தின் கீழ், கிண்ணியா பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மற்றும் சொந்தமாக வீடொன்றை அமைத்துக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளும் வீடற்ற மக்களுக்கான நிகழ்வொன்று இன்று (27) கிண்ணியா, காக்காமுனை பிரதேசத்தில் நடைபெற்றது.
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் திருகோணமலை மாவட்ட முகாமையாளர் நிமல் ராஜசிங்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா முதன்மை அதிதியாகக் கலந்துகொண்டார்.
இதன்போது, வறுமைக்கோட்டின் கீழ் வாழும் வீடற்ற மூன்று குடும்பங்களுக்கான புதிய வீடுகளுக்கு பிரதி அமைச்சரினால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டதோடு, மேலும் 10 பயனாளிகளுக்கான வீட்டு நிதியுதவிக் காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் மூதூர் தொகுதி இணைப்பாளரும், கிண்ணியா பிரதேச அபிவிருத்திக் குழு இணைப்பாளருமான எம். ஈ. எம். ராபிக் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கி வைத்தார்.
தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் இந்நடவடிக்கையின் கீழ், இந்த வருடம் (2026) கிண்ணியாவில் உள்ள 31 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலிருந்தும் தலா ஒரு குடும்பம் வீதம் 31 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இன்றைய நிகழ்வுடன் சேர்த்து, மொத்தம் 21 வீடுகளை நிர்மாணிப்பதற்கான ஆரம்பகட்ட தொகையாக, தலா ஒரு இலட்சத்து ஐம்பதாயிர ரூபாய் (Rs. 1,50,000) நிதி இதுவரை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், பிரஜா சக்தி தலைவர்கள், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

