முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை அரசாங்கத்தை சாடும் திஸ்ஸ

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று செப்டம்பர் மாதத்துடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், தேர்தல் காலத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றாது முற்றிலும் தவறான பாதையில் பயணிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தனாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், எந்தவொரு அரசாங்கமும் தனது கொள்கைப் பிரகடனத்தில் உள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை முதல் இரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே மேற்கொள்ள வேண்டும் எனச் சுட்டிக்காட்டினார்.

ஆனால், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுதல், பொருளாதாரத்தை பலப்படுத்துதல் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான வரிகளை நீக்குதல் போன்ற எந்தவொரு வாக்குறுதியையும் தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்று சாடினார்.

எனவே, அரசாங்கத்தின் ஊழல், மோசடிகள் மற்றும் தோல்விகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முன்னோடிப் பயணம் என்ற பெயரில் செப்டம்பர் மாத இறுதியில் வாக்குச்சாவடி மட்டத்தில் நாடு தழுவிய விழிப்புணர்வுப் பிரசாரத்தை தொடங்கவுள்ளதாகத் தெரிவித்தார். 

அத்துடன், அரசாங்கத்தின் மீது ஏமாற்றமடைந்துள்ள மக்களை ஒன்றிணைத்து 10 லட்சம் புதிய உறுப்பினர்களைக் கட்சியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் எவ்வித தீர்வும் வழங்கவில்லை எனச் சாடிய அவர், நெல்லுக்கு நியாயமான விலை கோரி விவசாயக் குடியேற்றப் பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளதாகத் தெரிவித்தார். 

வாக்குறுதியளித்தபடி அரசாங்கம் 120 ரூபாவிற்கு நெல்லைக் கொள்முதல் செய்யவோ அல்லது களஞ்சியசாலைகளைத் திறக்கவோ இல்லை என்றும், பயிர்ச்செய்கையை முன்னெடுத்துச் செல்ல உதவாமல், அறுவடை செய்ய முடியாவிட்டால் விவசாயத்தைக் கைவிடுமாறு விவசாய அமைச்சர் விவசாயிகளைப் பயமுறுத்துவதாகவும், தற்போதைய அரசாங்கம் விவசாயத்தை அழிப்பதற்கே வந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.

அத்துடன், சமீபநாட்களாக நாட்டின் பல சிறைச்சாலைகளில் மோதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்த மோதல்களில் அதிகாரிகள் மற்றும் கைதிகள் உட்பட சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். 

துப்பாக்கிச் சூடு மற்றும் அடக்குமுறைகள் மூலம் கைதிகளின் மன அழுத்தத்தையோ அல்லது சிறைச்சாலைப் பிரச்சினைகளையோ தீர்க்க முடியாது எனத் தெரிவித்த அவர், நீதிமன்ற வழக்குகள் மற்றும் அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகள் தாமதமாவதால் ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கம் சிறைச்சாலைகளின் வசதிகளை மேம்படுத்துவதோடு இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடியாகச் சட்ட ரீதியான தீர்வுகளைக் காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அரசியலமைப்பு திருத்தம் குறித்துப் பேசிய அவர், புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதாகவும், நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறையை ஒழிப்பதாகவும் உறுதியளித்த அரசாங்கம், தற்போது அதனை விடுத்து மேல் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் நோக்கில் தனிநபர் மையப்படுத்தப்பட்ட 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவர முயல்வதாகக் குற்றம் சாட்டினார். நீதிமன்றங்களில் 11 லட்சம் வழக்குகள் தேங்கிக் கிடப்பதாகக் கூறும் அரசாங்கம், கீழ் நீதிமன்றங்களிலேயே பெரும்பாலான வழக்குகள் உள்ளன என்பதை மறந்துவிட்டதாகவும், மேல் நீதிமன்ற நீதிபதிகளின் சேவைக் காலத்தை நீடிப்பதால் கீழ் நீதிமன்ற வழக்குகள் விரைவுபடுத்தப்படாது என்றும், நவீன தொழில்நுட்பம் மற்றும் புதிய நீதிமன்றங்களை நிறுவுவதன் மூலமே இதற்குத் தீர்வு காண முடியும் என்றும் அவர் விளக்கமளித்தார்.

மேலும், அரசாங்கத்தின் மீது பல பாரிய ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த திஸ்ஸ அத்தனாயக்க, சட்டவிரோதமான முறையில் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை, 1000 கோடி ரூபா நிலக்கரி மோசடி, திறைசேரி மற்றும் தபால் திணைக்கள நிதிகள் காணாமல் போனமை என பல மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகச் சாடினார். அரசாங்கம் இரு ஆண்டுகளில் பெருமளவு வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றுள்ள போதிலும், அவை மக்கள் நலன்சார் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படாமல் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை ஈடுசெய்யவே பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

இதன் காரணமாக தலா கடன் சுமை அதிகரித்துள்ளதுடன், 2027 முதல் 2029 வரையிலான காலப்பகுதியில் பில்லியன் கணக்கிலான கடன்களை நாடு செலுத்த வேண்டியுள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டிற்குள் 10.9 பில்லியன் டொலர் அந்நியச் செலாவணி இருப்பு பேணப்பட வேண்டிய நிலையில் தற்போது 5 பில்லியன் டொலர்கள் மட்டுமே கையிருப்பில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அவர், அரசாங்கத்தின் பொருளாதார நிர்வாகம் முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாகக் கூறித் தனது உரையை நிறைவு செய்தார்.

Source: https://samugammedia.com/election-promises-not-fulfilled-tissa-criticizes-the-government-1786516426

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.