நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு இன்று அதிக வெப்பத்துடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மஞ்சள் நிற எச்சரிக்கை (Heat Advisory) விடுத்துள்ளது.
மனித உடல் உணரும் வெப்பநிலையான ‘வெப்பக் குறியீடு’ (Heat Index), முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில், பகல் நேரத்தில் ‘எச்சரிக்கை’ நிலைக்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் அனைவரும் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பணியிடங்களில் உள்ள தொழிலாளர்கள், தங்களுக்குத் தேவையான அளவு அதிகப்படியான நீரைத் தொடர்ந்து அருந்த வேண்டும். அத்துடன், வேலைக்கு மத்தியில் முடிந்தவரை அடிக்கடி நிழலான இடங்களில் ஓய்வெடுக்க வேண்டும்.
கட்டிடங்களுக்குள் இருப்பவர்கள், தங்களது வீடுகளில் உள்ள முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தி அவர்களைப் பராமரிக்க வேண்டும்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குழந்தைகளை வாகனங்களுக்குள் தனியாக, கவனிக்காமல் விட்டுச் செல்ல வேண்டாம் எனப் பெற்றோருக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெயிலில் வெளியில் செல்பவர்கள் மற்றும் வெளிப்புற வேலைகளில் ஈடுபடுபவர்கள், தங்களது கடினமான உடல் உழைப்புச் செயல்களைக் குறைத்துக்கொள்வதுடன், நிழலைத் தேடிச் செல்வதையும், உடலை எப்போதும் நீரேற்றத்துடன் (Hydrated) வைத்திருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
வெப்பத்தின் நேரடித் தாக்கத்தைக் குறைப்பதற்காக, மக்கள் இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்து, இலேசான, வெள்ளை அல்லது வெளிர் நிற (Light-colored) ஆடைகளை அணியுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நிலவிவரும் இந்த அதிக வெப்பமான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, பொதுமக்கள் அனைவரும் சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைகளைப் பின்பற்றி அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Source: https://samugammedia.com/heat-warning-for-6-districts-including-mullaitivu-and-vavuniya-1783838675

