முல்லைத்தீவு (Mullaitivu) – வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப்பணியினை ஆரம்பிப்பதற்கு ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி ஆரம்ப
கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று (17) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க
வரவுசெலவுத்திட்டத்தை சமர்ப்பிக்கும்போதே இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
இந்தநிலையில், தமது அயராத தொடர் முயற்சியால் முல்லைத்தீவு மக்களின் நீண்டகால
பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
பால நிர்மாணம்
அதேவேளை தமது தொடர்ச்சியான கோரிக்கையை ஏற்று வட்டுவாகல் பாலத்தின்
நிர்மாணத்திற்கான நிதியை இவ்வருட வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கியதற்கு
ஜனாதிபதிக்கும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்,
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் விமல் ரத்நாயக்கவிற்கும் கூட்டுறவுப் பிரதி அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட
அபிவிருத்திக்குழுவின் தலைவருமான உபாலி சமரசிங்க ஆகியோருக்கு முல்லைத்தீவு
மக்களின் சார்பாக தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ரவிகரன் கூறியுள்ளார்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறிப்பாக முல்லைத்தீவு- வட்டுவாகல் பாலம் அமைக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற
உறுப்பினர் ரவிகரன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார்.
அந்தவகையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 29ஆம்திகதி முல்லைத்தீவு
மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட
ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்
குறித்த வட்டுவாகல் பாலம் அமைக்கப்படவேண்டுமென கூட்டுறவுப் பிரதியமைச்சர்
உபாலி சமரசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், குறித்த கூட்டத்தின் பின்னர்
பிரதி அமைச்சர் மற்றும், சக நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள்,
அனைவரையும் நேரடியாக வட்டுவாகல் பாலம் அமைந்துள்ள பகுதிக்கு அழைத்துச்சென்று
மக்கள் எதிர்நோக்கும் போக்குவரத்து இடர்பாடுகள் குறித்தும் நேரடியாகக்
காண்பித்திருந்தார்.
நிதி ஒதுக்கீடு
அதன் பின்னர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 04ஆம் திகதி ரவிகரன் தனது நாடாளுமன்ற முதல் உரையில் வட்டுவாகல் பாலம்
அமைக்கப்படவேண்டும் என வலியுறுத்தியதுடன், அதனைத் தொடர்ந்து அன்றைய தினம்
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியுடனான சந்திப்பிலும் இந்த விடயத்தை கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

இதன்போது வட்டுவாகல் பாலம்
அமைப்பது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படுமென ஜனாதிபதியும்
தெரிவித்திருந்தார்.
இந் நிலையில் கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் அமைச்சர்
விமல்ரத்நாயக்க மற்றும், துரைராசா ரவிகரன்
ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பில் வட்டுவாகல்பாலம் அமைப்பதற்கு 2025ஆம்
ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் நிதிஒதுக்கப்படுமென அமைச்சர் விமல்
ரத்நாயக்க உறுதியளித்திருந்தார்.
இத்தகைய சூழலிலேயே இன்று (17) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க
வரவு செலவுத்திட்டத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கும்போது வட்டுவாகல் பாலத்தின்
நிர்மாணத்தை ஆரம்பிப்பதற்கு ஆயிரம் மில்லியன் நிதி ஒதுக்கப்படுவதாக
அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

