இந்தியாவில் (India) சுற்றுலா பயணிகள் சென்ற வாகனம் ஒன்று 100 அடிபள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்து சம்பவமானது, உத்தரகாண்ட் (Uttarakhand) மாநிலத்தின் ருத்ரபிரயாக் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, வாகனத்தில் பயணித்த 12 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், சுற்றுலா பயணிகள் சென்ற வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பாரிய பள்ளத்தில் கவிழ்ந்து ஆற்றுக்குள் விழுந்துள்ளது.
இதனையடுத்து, இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், படுகாயம் அடைந்த 5 பேர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம்
விபத்து குறித்து தகவல் அறிந்தது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் வாகனத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், சுமார் 100 அடிக்கும் கீழ் வான் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகி இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடிய அச்சம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.