மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டத்தில் மேலும் 238 குடும்பங்களைச் சேர்ந்த 806 பேர் அவர்களது வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழையின் தாக்கம் காரணமாக தொடர்ந்து அங்கு மழையுடனான வானிலை நிலவுவதால் தேசிய கட்டிட ஆய்வு நிறுவனத்தின் ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார்.
குடும்பங்கள் வெளியேற்றம்
நேற்று (10) குறித்த நபர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

15 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 14 பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.பாதிக்கப்படாமல் இருந்த ரிதீமாலியத்த பிரதேச செயலாளர் பிரிவும் இப்போது பாதிக்கப்பட்டுள்ளது.
களுக்கேலே மலையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 50 குடும்பங்களைச் சேர்ந்த 129 பேரை பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.
சொர்ணாதோட்ட பிரிவில் 60 குடும்பங்களைச் சேர்ந்த 157 பேரும், ஊவா பரணகம பிரிவில் 40 குடும்பங்களைச் சேர்ந்த 127 பேரும், ரிதீமாலியத்த பிரிவில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 139 பேரும், மீகஹாகிவுல பிரிவில் 35 குடும்பங்களைச் சேர்ந்த 158 பேரும் மண்சரிவு அபாயம் காரணமாக அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஹாலி-எல பிரதேச செயலாளர் பிரிவில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 87 பேரும், எல்ல பிரதேச செயலாளர் பிரிவில் 34 குடும்பங்களைச் சேர்ந்த 148 பேரும் என மொத்தம் 238 குடும்பங்களைச் சேர்ந்த 806 பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட வேண்டியிருந்தது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

