முப்படைகளில் இருந்து தப்பிச்சென்ற அதிகாரிகள் உட்பட 2,983 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி முதல் மே 30ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகளில், இவர்கள் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட வீரர்களில் 2,261 பேர் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், 194 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும், 198 பேர் விமானப் படையைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சு
அதற்கமைய, தப்பிச் சென்றவர்களில் 330 பேரை காவல்துறையினர் கைது செய்ததாகவும் பாதுகாப்பு அமைச்சு (Defence Ministry) மேலும் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துயகொந்தாவின் (Sampath Thuyacontha) உத்தரவைத் தொடர்ந்து, சட்டரீதியாக பணியில் இருந்து விலகாமல் தப்பிச் சென்ற முப்படையினரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.
முப்படைகளில் இருந்து தப்பிச் சென்றவர்களே கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ள நிலையிலேயே இந்தக் கைது நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.