மணல் லொறி சாரதி ஒருவரின் உதவியுடன் கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு போதைப்பொருள் கடத்திய சந்தேகநபர் உட்பட மூவரை மட்டு தலைமையக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகபர்களை 95 கிராம் ஜஸ் போதை பொருளுடன் இன்று(05) அதிகாலை 2.30 மணிக்கு கரடியனாறு உறுகாமம் மற்றும் கொக்குவில் பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த கைது நடவடிக்கை தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மட்டு தலைமையக காவல்நிலைய ஊழல் ஒழிப்பு மற்றும் போதை ஒழிப்பு பிரிவினர் சம்பவ தினமான இன்று அதிகாலை கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை 2050 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்துள்ளனர்.
சுற்றிவளைப்பு சோதனை
இதனையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் வாங்கிய வியாபாரியை 5 கிராம் 450 மில்லிகிராமும் கைது செய்து மேற்கொண்ட விசாரணையில், கரடியனாறு காவல்துறை பிரிவிலுள்ள உறுகாமம் பகுதியைச் சேர்ந்த போதை பொருள் வியாபாரியிடம் அவற்றை வாங்கியதாக கூறியுள்ளார்.

பின்னர், உறுகாமத்திலுள்ள போதை பொருள் வியாபரியின் வீட்டை சுற்றி வளைத்து சோதனை செய்ததில் வீட்டின் கூரையில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறியின் மேலுள்ள கவசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 90 கிராம் ஜஸ் போதை பொருளை மீட்டதுடன் அவரை கைது செய்துள்ளனர்.
ஆரம்பக்கட்ட விசாரணை
இதில் கைது செய்யப்பட்டவர் 34 வயதுடையவர் எனவும் ஆற்று மணல் அகழ்வுக்கு செல்வதாகவும் அங்கு கொழும்பில் இருந்து மணல் ஏற்ற வந்த மணல் லொறி சாரதி உடன் தொடர்புடைய நிலையில் அவர் கொழும்பில் இருந்து இந்த போதை பொருளைகொண்டுவந்து வழங்கியதாக காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், 90 கிராம் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டவரை காவல்துறை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்காக நீதிமன்ற உத்தரவை பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் மற்றும் இருவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

