32 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில் வவுனியாவில் (Vavuniya) கைது செய்யப்பட்ட தம்பதியினரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த தம்பதியினரை நேற்றையதினம் (22) நீதிமன்றில் முற்படுத்தியபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ருமேனியாவிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி சுமார் 30 மில்லியன் ரூபாய் மோசடி
செய்ததாக ஒரு தம்பதியினருக்கு எதிராக மட்டக்களப்பு- ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தது.
நிதி மோசடி
விசாரணையின் போது 28க்கும் மேற்பட்ட நபர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக
வாக்குறுதி அளித்து நிதி மோசடி செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.
அவர்கள் 30
மில்லியன் ரூபாய் நிதியை மோசடி செய்ததாக செய்யப்பட்ட வழக்குக்கு அமைய ஏறாவூர்
நீதிமன்றத்தால் குறித்த கணவனுக்கு எதிராக 16 பிடியாணைகளும், மனைவிக்கு எதிராக
16 பிடியாணைகளும் ஆக 32 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
விளக்கமறியல்
இந்நிலையில், குறித்த தம்பதியினர் மட்டக்களப்பில் இருந்து வெளியேறி வவுனியா,
தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைந்திருந்த நிலையில் வவுனியா
பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கடந்த செவ்வாய்கிழமை (21) கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து, மேலதிக
விசாரணைகளின் பின் குறித்த இருவரையும் வவுனியா நீதிமன்றில் முற்படுத்திய வேளை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.