கொழும்பு 07 இல் அமைந்துள்ள 34 அமைச்சர் குடியிருப்புகளில் 29 வீடுகளின் சாவிகள் அரச பொது நிர்வாக அமைச்சிடம் கையளிக்கப்படவில்லை என்பதுடன், அந்த குடியிருப்புகளில் உள்ள பொருட்கள் தொடர்பில் அமைச்சிடம் எவ்வித தகவலும் இல்லை என தெரியவந்துள்ளது.
இதுவரை காலமும் இந்த குடியிருப்புகளில் இருந்த அமைச்சர்கள் உரிய சாவியை அந்த குடியிருப்புக்கு வரும் அடுத்த அமைச்சரிடம் ஒப்படைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த குடியிருப்புகளில் வசிக்கும் அமைச்சர்கள், தாம் பதவி வகித்த அமைச்சின் ஊடாக தமது குடியிருப்புகளுக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்துள்ளதாகவும், கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பில் அரச நிர்வாக அமைச்சிடம் எவ்வித தகவலும் இல்லை எனவும் தெரியவந்துள்ளது.
குடியிருப்புகளை உடனடியாக கையகப்படுத்த சட்ட ஏற்பாடுகள்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, அண்மையில் பொது நிர்வாக அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய போது, இந்த குடியிருப்புகளின் சாவிகளை உடனடியாக கையகப்படுத்துவதற்கு சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், சொத்துக்களை பாதுகாக்க பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அமைச்சர்கள் தங்கும் குடியிருப்புகளில் சாவிகள் எங்கே என்று கூட தெரியாத அரச நிர்வாக அமைச்சு, குடியிருப்புகள் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என தெரியவருகிறது.
இந்த குடியிருப்புகளில் அமைச்சர்களால் இன்னும் பல விடயங்கள் மறைக்கப்படலாம் என்றும் இதன் மூலம் பல இரகசியங்கள் வெளிவரலாம் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவினால் சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட பி.எம்.டபிள்யூ.கார் தனியார் ஹோட்டலில், குற்றப் புலனாய்வுப்பிரிவினரால் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.