சிறிலங்கா ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக இம்முறை மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் 6750 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட உள்ளதாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம்.பி.எம்.சுபியான் தெரிவித்துள்ளார்.
இன்று (19.09.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாந்தீவு வைத்தியசாலையில் இடம்பெற்று வந்த
வாக்களிப்பு நிலையம் இம்முறை மட்டக்களப்பு புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயம்
மண்டபம் இலக்கம் மூன்றில் வாக்களிப்பதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இது
இலங்கையில் ஆகக் குறைந்த அதாவது இரண்டு பேர் வாக்களிப்பதற்கான வாக்களிப்பு
நிலையமாகும்.
பாதுகாப்பு கடமையில் ஈடுபடல்
நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கான வாக்குப்பெட்டிகள்
வெள்ளிக்கிழமை (20) காலை 7:00 மணி முதல் மட்டக்களப்பு தேர்தல் மத்திய நிலையமாக
விளங்கும் மட்டக்களப்பு இந்து கல்லூரியில் இருந்து விநியோகிக்கப்படும்.
இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமை மற்றும் வாக்கெண்ணும்
பணிகளுக்காக 6750 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடவுள்ளதுடன் மொத்தமாக 1514 காவல்துறையினர் உள்ளிட்ட விசேட அதிரடிப்படையினர்
பாதுகாப்பு கடமையில் ஈடுபட உள்ளனர்.
இதுவரையிலும் வாக்காளர் அட்டைகள்
கிடைக்காத வாக்காளர்கள் நேரடியாக தபால் நிலையங்களுக்கு சென்று வாக்காளர்
அட்டையினை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். தேர்தல் பிணக்குகளை தீர்க்கும் நிலையத்திற்கு
இதுவரை 52 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இம் மாவட்டத்தில் இருக்கின்ற 14 பிரதேச செயலாளர் காரியாலயங்களிலும் இணைப்புக் காரியாலயங்கள் வெள்ளிக்கிழமை முதல் செயற்படும்.
தேர்தல் முறைப்பாடுகள்
தேர்தல் முறைப்பாட்டு காரியாலயங்களாக போரதீவு பற்று பிரதேச செயலகத்திலும்,
கோறளைப் பற்று மேற்கு பிரதேச செயலகத்திலும் கடந்த 13ஆம் திகதியில் இருந்து
செயற்பட்டு வருகின்றது.
முறைப்பாடுகள் கிடைக்கின்ற போது உடனடியாக
நடவடிக்கைகள் எடுப்பதற்குரிய ஒழுங்குகளையும் நாங்கள் செய்திருக்கின்றோம். தேர்தல் கடமைகளுக்காக அமர்த்தப்பட்டுள்ளவர்கள் உரிய நேரத்துக்கு சென்று தேர்தல் கடமைகளைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அதேபோன்று தபால் மூல வாக்கெண்ணும் பணியில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் 21ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு வருகை தருவதுடன், ஏனைய வாக்கெண்ணும் உத்தியோகத்தர்கள் அன்றைய தினம் பிற்பகல் 4
மணிக்கு தேர்தல் மத்திய நிலையமாக காணப்படும் மட்டக்களப்பு இந்து கல்லூரிக்கு வருகை தர வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.