மன்னார் பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற இளம் தாயின் மரணம் தொடர்பாக தாதியர் மற்றும் குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து வைத்தியர் ஒருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் எம்.எச்.அஸாத் தெரிவித்துள்ளார்.
மன்னார் பொது வைத்தியசாலையில் குழந்தை பிரசவித்த 27 வயதான இளம் தாய் குருதிப் போக்கு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஜூலை 28ஆம் திகதி மன்னார் பொது வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
பதவி இடைநீக்கம்
அதனையடுத்து, அந்த இளம் தாய்க்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் வைத்தியரின் அசமந்தப் போக்கே அவரது மரணத்துக்கு காரணம் எனவும் முறையீடுகள் வலுத்திருந்தன.
இதனால் வைத்தியசாலை, மாகாண மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகள் கொண்ட குழுவினர் தனித்தனியே விசாரணைகளில் ஆரம்பித்துள்ளனர்.
இதன்போது, இளம் தாயின் மரணத்துக்கான காரணகர்த்தாக்கள் என சந்தேகிக்கப்பட்டவர்களில் ஐந்து பேரில் ஏற்கனவே இரண்டு தாதியர்களும் இரண்டு குடும்ப நல உத்தியோகத்தர்களும் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் தற்போது வைத்தியர் ஒருவரும் பணி இடைநீக்கம் செய்யப்படுவதாக கடந்த புதன்கிழமை (21) தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வைத்தியப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அந்த வைத்தியர் தற்பொழுது சுகயீன விடுமுறையில் நிற்பதால் இது தொடர்பாக அவருக்கு தகவல் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.