மீரிகம பிரதேசத்தில் வீட்டில் தனியாக இருந்த போது தன்னை தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக பொலிஸாரிடம் பொய் முறைப்பாடு செய்த பெண் ஒருவரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அத்தனகல்ல பதில் நீதவான் சமித லால் கொடிசிங்க உத்தரவிட்டார்.
மீரிகம பிரதேசத்தில் உள்ள கிராமமொன்றில் வசிக்கும் 52 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வீட்டில் தனிமையில் இருந்த தன்னை பலவந்தமாக தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக சந்தேகநபர் மீரிகம பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
பொய் முறைப்பாடு
அந்தப் முறைப்பாட்டின் பேரில், பொலிஸார் விசாரணை நடத்தி, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்த பின்னர், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, தனிப்பட்ட கோபத்தின் காரணமாக குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக பொய் முறைப்பாடு செய்ததாக தெரியவந்துள்ளது.
இங்கு, குற்றம்சாட்டப்பட்டவரை விடுதலை செய்ய உத்தரவிட்ட நீதவான், பொய் முறைப்பாடு செய்தமைக்காக முறைப்பாட்டாளரைக் கைது செய்து விசாரணை அறிக்கையுடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த மீரிகம பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
அதற்கமைய, பொய் புகார் அளித்த பெண்ணை பொலிஸார் கைது செய்து வாக்குமூலம் பதிவு செய்து நீதிமன்றத்தில் அறிக்கையுடன் முன்னிலைப்படுத்தப்பட்டார். அதற்கமைய, அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் .