பாகிஸ்தான்(pakistan) அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டையும் வென்று 2:0 என்ற கணக்கில் தொடரை தன்வசப்படுத்தி பங்களாதேஷ்(bangladesh) அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
ராவல்பிண்டியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுக்களால் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றிருந்தது.
இந்த நிலையில் தீர்மானம் மிக்க இரண்டாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வந்தது.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் முதல் இனிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 274 ஓட்டங்களுக்கும், பங்களாதேஷ் முதல் இனிங்ஸில் 262 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தன.
பாகிஸ்தானை சுருட்டிய பங்களாதேஷ் பந்து வீச்சாளர்கள்
பங்களாதேஷ் 262 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால், பாகிஸ்தான் அணி 12 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. 12 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இனிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான், மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 9 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
21 ஓட்டங்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் அணி 4-வது நாள் ஆட்டத்தைத் தொடங்கியது. பங்களாதேஷ் வீரர் ஹசன் மஹ்முத்தின் அசத்தலான பந்துவீச்சினால் பாகிஸ்தான் அணி அதன் இரண்டாவது இனிங்ஸில் 172 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக அகா சல்மான் 47 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அவரைத் தொடர்ந்து, முகமது ரிஸ்வான் அதிகபட்சமாக 43 ஓட்டங்கள் எடுத்தார்.
பங்களாஷே் தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹசன் மஹ்முத் டெஸ்ட் போட்டிகளில் முதல் முறையாக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
நஹித் ராணா 4 விக்கெட்டுகளையும், டஸ்கின் அகமது ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
எளிய இலக்கை துரத்திய பங்களாதேஷ்
பாகிஸ்தான் அணி இரண்டாவது இனிங்ஸில் 172 ஓட்டங்ககளுக்கு ஆட்டமிழந்ததையடுத்து, 185 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி பங்களாதேஷ் இரண்டாவது இனிங்ஸைத் தொடங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஸகிர் ஹசன் மற்றும் ஷத்மான் இஸ்லாம் ஆகியோர் நிதான ஆட்டத்தை கடைப்பிடித்தனர். முதல் விக்கெட்டுக்கு 58 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் ஸகிர் ஹசன் 40 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஷண்டோ 38 ஓட்டங்களும்,மொமினுல் ஹக் 34 ஓட்டங்களும், விக்கெட் காப்பாளர் முஷ்பிகுர் ரஹிம் 22 ஓட்டங்களும் எடுத்தனர்.
தொடர் நாயகன் விருது
இதன் மூலம் பங்களாதேஷ் அணி 56 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 185 ஓட்டங்கள் எடுத்து வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. மேலும், பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே 2-0 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியுள்ளது.
முதல் இனிங்கிஸில் 138 ஓட்டங்கள் அடித்த லிட்டன் தாஸூக்கு ஆட்டநாயகன் விருதும், மெஹதி ஹசனுக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.