கொழும்பில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டமொன்றில் 6800 நீர்மாணிகள் காணாமல் போன நிலையில் 915 மாணிகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கண்டுபிடித்துள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் வர்த்தகப் பணிப்பாளர் டபிள்யூ. எஸ். குமார கடந்த மாதம் 23ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் இது தொடர்பில் முறைப்பாட்டு செய்துள்ளார்.
அவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே இந்த நீர் மீட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நீர்மாணிகளின் பெறுமதி
இவ்வாறு காணாமல் போன நீர்மாணிகளின் பெறுமதி சுமார் 51 கோடி 36 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நீர்மாணிகள் கொழும்பில் உள்ள ஒரு திட்டத்திற்காக இரத்மலானை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மாதம் 20 ஆம் திகதி காணாமல் போயுள்ளது.
வழக்கு விசாரணை
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், அடுத்த விசாரணை எதிர்வரும் 27ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
அத்துடன், இச்சம்பவம் தொடர்பான விசாரணையின் முன்னேற்றத்தை தெரிவிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.