இந்தியாவில் இளைஞர் ஒருவரின் குடலிலிருந்து 2 சென்றிமீட்டர் நீளமுடைய உயிருடன் இருந்த கரப்பான் பூச்சி வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது,டெல்லியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரின் வயிற்றிலிருந்தே கரப்பான் பூச்சி அகற்றப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன், கடந்த சில தினங்களாக வயிற்று வலி மற்றும் அஜீரணக் கோளாறு வயிற்று உப்புசம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவ பரிசோதனை
இதனையடுத்து டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார்.
அங்கு மருத்துவர்கள் வழக்கமான பரிசோதனைகளை மேற்கொண்ட போது இளைஞரின் சிறு குடலுக்குள் ஒரு கரப்பான் பூச்சி, உயிருடன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சையின்றி எண்டோஸ்கோபி முறையில் அகற்ற முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் 4பேர் கொண்ட மருத்துவக் குழு எண்டோஸ்கோப்பைப் பயன்படுத்தி கரப்பான் பூச்சியை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
மருத்துவர் ஆச்சரியம்
இது குறித்து காஸ்ட்ரோஎன்டாலஜி மூத்த மருத்துவர் ஷுபம் வாத்ஸ்யா கூறுகையில்,
“இளைஞர் உணவு உட்கொள்ளும் போது கரப்பான் பூச்சியை விழுங்கியிருக்கலாம் அல்லது தூங்கும் போது அது அவரது வாயில் நுழைந்திருக்கலாம்.
எனினும், கரப்பான் பூச்சி எவ்வாறு அப்படியே உயிருடன் இருந்தது என்று நாங்கள் கூட ஆச்சரியப்பட்டோம்.
அத்துடன், சரியான நேரத்தில் சிகிச்சையாக்கப்படாவிட்டால் இது போன்ற வழக்குகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திருக்கும்” என அவர் கூறியுள்ளார்.