இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) உருவாக்கிய LVM3 ஏவுகணை, இன்று(24) ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.
ஏவுதலுக்கு பின்னர் 15 நிமிடங்களில், குறித்த ஏவுகணையில் இருந்த அமெரிக்காவின் AST SpaceMobile நிறுவனம் உருவாக்கிய BlueBird Block-2 தொடர்பு செயற்கைக்கோள், தாழ் பூமி வட்டப்பாதையில் (LEO) துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புதிய சாதனை
6,100 கிலோகிராம் எடையுடைய இந்த செயற்கைக்கோள், இந்தியாவில் இருந்து LVM3 மூலம் ஏவப்பட்ட மிக கனமான செயற்கைக்கோளாகவும், LEO-வில் நிலைநிறுத்தப்பட்ட மிகப்பெரிய வணிக தொடர்பு செயற்கைக்கோளாகவும் புதிய சாதனை படைத்துள்ளது.

இந்த BlueBird Block-2 செயற்கைக்கோள், நேரடியாக சாதாரண தொலைப்பேசிகளுக்கு 4G, 5G சேவைகள், குரல் மற்றும் காணொளி அழைப்புகள், இணைய சேவைகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மகிழ்ச்சியில் மோடி
இந்த வெற்றியை தொடர்ந்து, இந்தியாவின் கனரக ஏவுகணை திறன் மற்றும் உலகளாவிய வணிக விண்வெளி சந்தையில் அதன் பங்கு மேலும் வலுப்பெற்றுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

அத்தோடு, இது LVM3-ன் ஆறாவது செயற்பாட்டு பறப்பாகவும், மூன்றாவது வணிக நோக்கிலான சிறப்பு பயணமாகவும் அமைந்ததாக கூறப்படுகிறது.

