அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள பணம் இல்லை என்று அமைச்சர் விஜித ஹேரத் கூறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசார மேடையொன்றில் அவர் இதனை குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நான் ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சராகவும், தினேஷ் குணவர்த்தன பிரதமர் மற்றும் பொது நிர்வாக அமைச்சராகவும் கடந்த மே மாதம் 27ஆம் திகதி நாங்கள் தீர்மானம் ஒன்றினை எடுத்திருந்தோம்.
இதற்கமைய, அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக எனது செயலாளர் சமன் ஏக்கநாயக்க கடந்த ஜூலை 11ஆம் திகதி விசேட நிபுணர்களைக் கொண்ட குழு ஒன்றை நியமித்தார்.
என்றாலும் அந்த சம்பள அதிகரிப்பை வழங்க பணம் இல்லை என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார். நான் பொய் சொல்லி இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
அரச ஊழியர்களின் ஆரம்ப பிரிவின் மாதாந்த அடிப்படைச் சம்பளம் 30ஆயிரம் ரூபாவாகக் கொண்டு, அரச சேவையின் நிவைவேற்று குழு, உயர் சேவை குழு, அமைச்சரவை செயலாளர் ஆகிய பதவிகளுக்கிடையில் 1:6 விகிதாசாரங்களுக்கு அமைவாக ஒட்டுமொத்த அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பள அளவு திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இரண்டு கட்டங்களாக இந்த சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கே தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமையவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் இருப்பவர்கள் அரச திணைக்களங்களின் பணிப்பாளர்கள், ஓய்வு பெற்ற அரச சேவை பணிப்பாளர்கள் மற்றும் தற்போதும் சேவையில் இருப்பவர்களாகும்.
இந்த குழுவில் இருக்கும் ஒருவர் தற்போது ஜனாதிபதியின் ஆலாேசகராக இருக்கிறார்.
இவர்கள் அனைவரும் சம்பள அதிகரிப்பு அறிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
இது தொடர்பில் பிரதமருக்கு தெரியுமா? அப்படியானால் இந்த விடயத்தை அரசாங்கம் பொய் என எவ்வாறு தெரிவிக்க முடியும்.
திறைசேரியின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவருடன் இந்த சம்பள அதிகரிப்பு தொடர்பில் கலந்துரையாடி இருக்கிறோம்.
அதனால் அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பள அதிகரிப்பை அரச அதிகாரிகளுக்கு செலுத்த முடியும்.
இவர்களுக்கு கண்டுபிடிக்க முடியாத வகையில் பொய் சொல்ல தெரியாது. பணம் இருக்கிறது. தேடிக்கொள்ளவும் முடியும். அதன் பிரகாரம் இந்த சம்பள அதிகரிப்பை வழங்க முடியும்.
எங்களுக்கு எதிராக வாக்களிக்குமாறு அன்று இவர்கள் அரச ஊழியர்களுக்கு கூறினர். அதன்படி அவர்களும் வாக்களித்தனர்.
இப்போது திசைகாட்டி அரச ஊழியர்களுக்கு டாடா காட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால் எங்களால் தீர்மானிக்கப்பட்ட இந்த சம்பள அதிகரிப்புக்கு அரசாங்கம் இணங்கும் வரையில் நாங்கள் எதிர்ப்பை முன்னெடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.