இந்தியா (India) திருச்சி – இலங்கை இடையே கூடுதல் விமான சேவையை சிறிலங்கன் விமான நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
திருச்சியில் கடந்த (31.10.2024) நடந்த விழாவில் சிறிலங்கன் விமான நிறுவன (SriLankan Airlines) திருச்சி நிலைய மேலாளா் அஜாஸ் சேவையை ஆரம்பித்து வைத்துள்ளார்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூா், மலேசியா, இலங்கை, துபாய், சாா்ஜா உள்ளிட்ட நாடுகளுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றன.
கூடுதல் விமானச் சேவை
இவற்றில் இலங்கை தவிர மற்ற நாடுகளுக்கு தினசரி 1 முதல் 4 சேவைகள் உள்ளன. ஆனால் இலங்கைக்கு விமானங்களை இயக்கும் சிறிலங்கன் விமான நிறுவனம் தினசரி 1 என்ற வகையில் வாரந்தோறும் 7 சேவைகளை மட்டுமே இயக்கி வந்தது.
அதன்படி வாரத்தில் செவ்வாய், புதன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.10 மணிக்கு இலங்கையிலிருந்து வரும் விமானம் 10.10 இற்கு மீண்டும் இலங்கை செல்லும்.
இதுபோல திங்கள், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 3.05 மணிக்கு இலங்கையிலிருந்து வரும் விமானம் 4.10-க்கு புறப்பட்டு செல்கிறது.
இந்நிலையில், வியாழக்கிழமைகளில் காலையும் இலங்கைக்கு கூடுதல் விமானச் சேவை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.