Courtesy: Sivaa Mayuri
இராமாயண பாதையை விளம்பரப்படுத்தும் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸின்(SriLankan Airlines) விளம்பரம், அந்தக் காவியத்துடன் இணைக்கப்பட்ட இடங்களை காட்சிப்படுத்தியதற்காக பாராட்டைப் பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள “ராமாயணப் பாதை”யைக் காட்சிப்படுத்தும் விளம்பரம் இணையத்தில் பலரையும் கவர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஐந்து நிமிட விளம்பரத்தில் ஒரு பாட்டி ஒரு சிறுவர் புத்தகத்திலிருந்து தனது பேரனுக்கு இந்து இதிகாசத்தின் கதையை விபரிக்கிறார்.
தீவைப் பற்றிய கேள்வி
சீதையைக் கடத்திய பிறகு இராவணன் அழைத்துச் சென்ற தீவைப் பற்றி பேரன் கேட்கிறான்.
பாட்டி அவரிடம் இலங்கையில் இராவண ராஜ்ஜியத்தின் கதையைச் சொல்கிறார். மேலும், இராமாயணத்தில் உள்ள அனைத்து இடங்களும் உண்மையானவை என்று அவர் கூறியுள்ளார்.
இந்தநிலையில், சீதை, அசோக வனத்துக்கு மாற்றப்படுவதற்கு, தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக நம்பப்படும் நகரத்துக்கு அருகிலுள்ள இராவணன் குகையின் காட்சிகளை விளம்பரக்காணொளி காட்டுகிறது.
இலங்கையின் இந்திய வம்சாவழித் தமிழர்களால் பராமரிக்கப்படும் சீதா கோயில் என்றும் அழைக்கப்படும் சீதை அம்மன் கோயிலையும் இந்த காணொளி காட்டுகிறது.
ராமர் சேது பாலம்
தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தை இலங்கையின் கடற்கரையுடன் இணைக்கும் ராமர் சேது பாலத்தைக் குறிப்பிட்டு, அது, இலங்கையை அடைய இராமரின் படையால் கட்டப்பட்ட பாலம் என்று காணொளியில் பேசப்படுகிறது.
இதன்போது, காணொளியில் பாலம் இன்னும் இருக்கிறதா என்று பேரன் கேட்க, ஆம், இன்றும்; அதைப் பார்க்க முடியும் என்று பாட்டி பதிலளிக்கிறார்.
இந்தநிலையில் இராமாயணக் கதையின் மூலம் ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்த இலங்கை விமான நிறுவனம் மேற்கொண்ட முயற்சியை எக்ஸ் தளப் பயனர்கள் பாராட்டியுள்ளனர்.