Courtesy: Sivaa Mayuri
அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிக்கக் கோரி இந்தவாரம் மூன்றாவது நாளாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கைகளை சீர்குலைத்ததால், இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும், இன்று, அமர்வுகளை ஆரம்பித்த சில நிமிடங்களில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.
கௌதம் அதானி, அவரது மருமகன் சாகர் அதானி, அதானி கிரீன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வினீத் எஸ். ஜெயின் ஆகியோர் இந்திய சூரிய சக்தி விநியோக ஒப்பந்தங்களைப் பெற 265 மில்லியன் டொலர் இலஞ்சம் வழங்கியதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மோடியின் ஆதரவு
அத்துடன், தமது சூரியக்கதிர் மின்சார திட்டத்துக்கு நிதி திரட்டும் போது அமெரிக்க முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்தியதாகவும் அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்தநிலையில், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்றும், அதானி விவகாரத்தில் பிரதமரிடம் பதிலைக் கோரியும், காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்களை விடுத்து வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடியும், அவரது பாரதீய ஜனதா கட்சியும் அதானிக்கு ஆதரவாக இருப்பதாகவும், இந்தியாவில் அதானிக்கு எதிரான விசாரணைகளைத் தடுப்பதாகவும் இந்தியாவின் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை பிரதமர் மோடி மறுத்து வருகிறார். அதானியை கடுமையாக விமர்சித்து வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 62 வயதான கௌதம் அதானியை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.