14 வயது சிறுமி ஒருவரை தவறான நடத்தைக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 31 வயதுடைய நபருக்கு 30 வருட சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டுள்ளது.
மேலும், குறித்த நபருக்கு 45,000 ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 450,000 ரூபாய் இழப்பீடு வழங்கவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தின் போது,14 வயதான குறித்த சிறுமி, ஆலயம் ஒன்றின் வருடாந்த தேரோட்டத்தை காண சென்றிருந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர், மருதானை பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று, பலவந்தமாக தடுத்து வைத்து தவறான நடத்தைக்கு உட்படுத்தியுள்ளார்.
சட்டவிரோத நடவடிக்கை
இந்நிலையில், சிறுமியை சட்டவிரோதமாக காவலில் வைத்தமை மற்றும் தவறான நடத்தைக்கு ஈடுபடுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்காக குற்றம் சாட்டப்பட்டவர் மீது குற்றப்பத்திரிகை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, தீர்ப்பை அறிவித்த உயர்நீதிமன்ற நீதிபதி, ஒவ்வொருவரும் தங்கள் தாய், சகோதரி மற்றும் மனைவியை மதிப்பது போல் சமுதாயத்தில் அறிவு முதிர்ச்சி அடையாத இதுபோன்ற குழந்தைகளை மதிக்க உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற குழந்தைகளை சட்டவிரோதமான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தும் நபர்கள் நீதிமன்றத்தின் மன்னிப்புக்கு தகுதியற்றவர்கள் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.