பாடசாலைகளில் புதிய தவணை ஆரம்பிக்க முன் மாணவர்களுக்கு சீருடைகளை வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை கல்வி அமைச்சின் ( Ministry of Education) செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், வலயக் கல்வி அலுவலகங்களூடாக பாடசாலைகளுக்கு சீருடைகள் அனுப்பப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை சீருடை துணி
இதேவேளை, 2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைகளுக்கான முழுத் தொகை துணியையும் அன்பளிப்பாக வழங்க சீன மக்கள் குடியரசு முன்வந்துள்ளது. அதன்படி, 10,096 அரசாங்க மற்றும் அரசாங்க உதவி பெறும் பாடசாலைகளுக்கும், 822 அங்கீகரிக்கப்பட்ட பிரிவேனாக்களுக்கும் பாடசாலை சீருடை துணி வழங்கப்படும்.
2023 ஆம் ஆண்டில், மொத்தம் 4,585,432 மாணவர்கள் பாடசாலை சீருடை துணியைப் பெற்றிருந்த நிலையில், 70 சதவீத சீருடைகள் சீனாவால் மானியமாக வழங்கப்பட்டன, மீதமுள்ள 30% உள்ளூர் ஆடை உற்பத்தியாளர்களிடமிருந்து ரூ. 2,493,762 மில்லியன் செலவில் பெறப்பட்டது.
அத்தோடு, 2024 இல், 4,559,420 மாணவர்கள் பாடசாலை சீருடை துணியைப் பெற்றதோடு, 80 சதவீத துணி (9,259,259 மீட்டர்) சீனாவால் மானியமாக வழங்கப்பட்டது, அதன் மதிப்பு ரூ. 5,317 மில்லியன் ஆகும்.
எஞ்சிய 20% (1,938,399 மீற்றர்) இலங்கை அரசாங்க வர்த்தக கூட்டுத்தாபனம் லிமிடெட் மூலம் மானியமாக, அமைச்சரவை அனுமதியுடன், ரூ. 970 மில்லியன் செலவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.