வவுனியா (Vavuniya) சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மின்சாரம் நேற்று சிறிது நேரம் துண்டிக்கப்பட்ட நிலையில் அங்கு குளிரூட்டியில் வைக்கப்பட்டிருந்த தடுப்பூசிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மின்சாரம் நேற்று (15.01.2025) சிறிது நேரம் துண்டிக்கப்பட்டிருந்தது.
இதனால் அங்கு வைக்கப்பட்டிருந்த தடுப்பூசிகள் பாதிக்கப்படுமா? என கேள்வி எழுப்பப்பட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.
தடுப்பூசிகள்
இந் நிலையில் சிறிது நேரமே மின்சாரம் தடைப்பட்டமையினால், குறித்த தடுப்பூசிகளை பாதுகாக்க கூடிய வசதி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் உள்ளமையினால் தடுப்பூசிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
எம்மிடம் உள்ள குளிரூட்டிகள் 24 மணித்தியாலம் மின்சாரம் தடைபட்டாலும் கூட பாதுகாக்க கூடிய வசதி கொண்டவையாக காணப்படுகின்றது.
எனவே இங்குள்ள தடுப்பூசிகள் எந்த விதத்திலும் பழுதடைவதற்கு சந்தர்ப்பமில்லை என அவர் தெரிவித்திருந்ததுடன் பொதுமக்கள் எவ்வித ஐயமும் இன்றி குறித்த தடுப்பூசிகளை பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளார்.