அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) நாளை (20) பதவியேற்கவுள்ள நிலையில், பதவியேற்பு விழாவை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்காகப் புளோரிடாவில் இருந்து புறப்பட்ட ட்ரம்ப் அமெரிக்க தலைநகர் வொஷிங்டனுக்கு நேற்று (18) சென்றடைந்துள்ளார்.
பதவியேற்பு விழாவையொட்டி அமெரிக்க தலைநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாரம்பரிய வழக்கம்
வொஷிங்டனின் புறநகரில் வேர்ஜினியாவின் ஸ்டெர்லிங்கில் (Sterling) உள்ள ட்ரம்ப்பின் தேசிய கோல்ப் கிளப்பில் இரவு விருந்து நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது.
இதில் புதிய ஜனாதிபதியாகும் ட்ரம்பும், துணை ஜனாதிபதியாகும் ஜே.டி.வான்சும் பங்கேற்று தங்களின் அமைச்சரவை உறுப்பினர்களை வரவேற்று விருந்தளிக்க உள்ளனர்.
இதைத் தொடர்ந்து, இன்று (19) இராணுவ வீரர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள ஆர்லிங்க்டன் தேசிய கல்லறைக்கு ட்ரம்ப் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தவுள்ளார்.
பின்னர், பதவியேற்கும் விழாவான நாளை அவர் வெள்ளை மாளிகைக்கு செல்லும் முன்பாக பாரம்பரிய வழக்கப்படி செயின்ட் ஜோன்ஸ் எபிஸ்கோபல் தேவாலயத்தில் பிரார்த்தனை செய்யவுள்ளார்.
முதல் அறிவிப்பு குறித்த ஆவணம்
அதைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகைக்கு வரும் ட்ரம்புக்கு தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் இருவரும் தேநீர் விருந்து அளித்து வரவேற்பார்கள்.
பின்னர் ஜனாதிபதி பைடன் புதிய ஜனாதிபதி ட்ரம்ப்பை நாடாளுமன்றத்திற்கு அழைத்துச் செல்வார். அங்கு முறைப்படி 47வது ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றுக் கொள்வார்.
சம்பிரதாயப்படி, தனது முதல் அறிவிப்பு குறித்த ஆவணத்தில் ட்ரம்ப் கையெழுத்திட்டு ஜனாதிபதி பணியைத் தொடங்க உள்ளார்