அமெரிக்காவின் முன்னனி எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் மொட்டுக்கட்சியின் ஆட்சியின் போது அமெரிக்க நிறுவனமொன்றுடன் ஒப்பந்தமிட்டப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலைய திட்டத்தை ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியின் போது மீறியமைக்காகவே இந்த வழக்கு தொடரப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான தகவலை வெளியுறவு சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் வெளிப்படுத்தியுள்ளார்.
ரணில் நிர்வாகம்
இலங்கையில் தனியார் துறையால் நடத்தப்படும் எரிபொருள் நிரப்பு நிலையத்தை ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க ரணில் நிர்வாகத்தின் போது ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது என்றும் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், தனியார் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் இதனை வழங்க மறுப்பு தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இந்த பொறியில் இருந்து தப்பிக்க தற்போதைய அரசாங்கம் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவின், கலிபோர்னியாவை தளமாகக் கொண்டு இயங்கும் முன்னணி பெற்றோலிய உற்பத்திகள் விநியோகஸ்தரான குறித்த நிறுவனம் இலங்கையின் நிறுவனத்துடன் இணைந்து, இலங்கைக்கு பெட்ரோலிய உற்பத்திகளை கொண்டு வருவதற்காக, இலங்கை முதலீட்டு சபையுடன் (BOI) கடந்த 2023 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிட்டது.
இது, 110 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டைக் கொண்ட ஒரு ஒப்பந்தமாகும்.
110 மில்லியன் அமெரிக்க டொலர்
குறித்த ஒப்பந்தத்தில், இலங்கை முதலீட்டுச் சபை சார்பாக, அதன் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர்.
குறித்த நிறுவனம் தற்போது ஐரோப்பா, ஆசியா, ஆபிரிக்கா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் அமெரிக்காவின் ஏனைய பகுதிகளில் முன்னணி எரிசக்தி மற்றும் பெட்ரோலிய இரசாயன உற்பத்திகளின் விற்பனை மற்றும் விநியோக நிறுவனமாக செயற்பட்டு வருகிறது.
புதிய ஒப்பந்தத்தின்படி, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 150 உரிமை பெற்ற எரிபொருள் நிரப்பு நிலையங்களையும் 50 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களையும் இயக்குவதன் மூலம் இலங்கையில் பெற்றோலியம் தொடர்பான உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வணிகத்தில் ஈடுபடும் என கூறப்பட்டுள்ளது.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுடன் மேற்கொள்ளவுள்ள நீண்ட கால ஒப்பந்தத்தின் படி, பெட்ரோல், டீசல், ஜெட் A-1, மண்ணெண்ணெய், உலை எண்ணெய் உள்ளிட்ட பெற்றோலியப் பொருட்களின் இறக்குமதி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றில் ஈடுபட ஒப்பந்தமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.