வவுனியாவில்(vavuniya) இன்று(22) பெய்த கடும் மழை காரணமாக கடவுச்சீட்டு அலுவலகத்துக்குள் வெள்ளநீர் சென்றமையினால் அலுவலக செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளன.
இன்று மதியம் வவுனியா மாவட்டத்தில் கடும் மழை பெய்ததன் காரணமாக மன்னார் வீதி மற்றும் ஒரு சில பிரதேசங்களிலும் வீதியை ஊடறுத்து நீர் பாய்ந்ததன் காரணமாக வெள்ளமாக காட்சியளித்தது.
அலுவலகச் செயற்பாடுகள் பாதிப்பு
இந்நிலையில் மன்னார்(mannar) வீதியில் அமைந்துள்ள கடவுச்சீட்டு அலுவலகத்தினுள்ளும் வெள்ள நீர் புகுந்தமையினால் அலுவலகச் செயற்பாடுகள் பாதிப்படைந்ததோடு கடவுச்சீட்டுக்காக வருகை தந்திருந்தவர்களும் திரும்பிச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
குறித்த கடவுச்சீட்டு அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் உள்ள வடிகான் வெள்ளநீர் செல்வதற்கு போதுமானதாக காணப்படாமையினாலே இவ்வாறான அனர்த்தம் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
பெய்து வரும் கன மழை
இதேவேளை வவுனியாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் 20 குடும்பங்களை சேர்ந்த 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தமது இருப்பிடங்களில் இருந்தும் வெளியேறியுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
அந்தவகையில், வவுனியா பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நெளுக்குளம் பகுதியில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் பீடியாபாம் பகுதியில் 19 குடும்பங்களை சேர்ந்த 61 பேரும் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வான் பாயும் குளங்கள்
அத்துடன், மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள பாவற்குளம், இராசேந்திரங்குளம், ஈரப்பெரியகுளம், முகத்தான்குளம், மருதமடுக்குளம் மற்றும் கல்மடு அணைக்கட்டு என்பன நீர் வரத்து அதிகரித்தமையால் தொடர்ந்தும் வான் பாய்ந்து வருகின்றன.
இதனால் இதன் கீழ் பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.