வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சீதுவ, வெத்தேவ பகுதியில் உள்ள விகாரையின் பிக்குவை கொலை செய்தமை மற்றும் பொருட்களை திருடிய சம்பவங்களுடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
2022ஆம் ஆண்டு 9ஆம் மாதம் 14ஆம் திகதி இந்தக் குற்ற செயல் நடந்ததாகவும், சீதுவ பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண் கைது
இந்தக் கொலை தொடர்பான விசாரணைகளில், அதே விகாரையில் வசித்து வந்த ஒரு துறவி இந்தக் கொலையை செய்ததாகவும், அந்தத் துறவியுடன் தொடர்பு வைத்திருந்த வெளிநாட்டில் வசிக்கும் பெண் இந்தக் கொலையை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் தொடர்பான தகவல்களை பொலிஸர் நீதிமன்றத்தில் தெரிவித்து, சந்தேக நபருக்கு எதிராக விமானப் பயணத் தடையைப் பெற்றனர்.
அதற்கமைய, இந்த சந்தேக நபர் நேற்று முன்தினம் காலை டுபாயில் இருந்து நாட்டிற்கு வந்தவுடன் விமான நிலைய குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விமான நிலைய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மினுவங்கொட பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.