மண்சரிவு காரணமாக எல்ல (Ella) – வெல்லவாய (Wellawaya) வீதியுடனான போக்குவரத்தை முற்றாகத் தடைசெய்ய தீர்மானித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட உதவி பணிப்பாளர் ஈ.எம்.எல். உதயகுமார (E.M.L. Udayakumara) தெரிவித்துள்ளார்.
அதன்படி இன்று மாலை (14.03.2025) 6.30 முதல் நாளை காலை 6 மணி வரை குறித்த வீதியுடனான போக்குவரத்தை முற்றாகத் தடைசெய்யப்படவுள்ளது.
குறித்த வீதியுடனான போக்குவரத்து இயல்புநிலைக்கு திரும்பும் வரை வெல்லவாய மற்றும் எல்ல பகுதியை நோக்கிப் பயணிக்கும் கனரக வாகனங்களை மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
மண்சரிவு
அதற்கமைய, எல்ல பகுதியிலிருந்து வெல்லவாய நோக்கிப் பயணிக்கும் வாகனங்கள் பண்டாரவளையில் இருந்து அம்பதண்டேகம வழியாக ஊவா கரந்தகொல்ல வழியாக வெல்லவாய நோக்கிப் பயணிக்க முடியும்.
வெல்லவாயவில் இருந்து எல்ல நோக்கிப் பயணிக்கும் வாகன சாரதிகள் வெல்லவாய ஊவா கரந்தகொல்ல பகுதியிலிருந்து அம்பதண்டேகம வழியாக எல்ல நோக்கிப் பயணிக்க முடியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.